ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், யானைகளின் வலசை பாதைகளை மீட்க 'டிரோன் மேப்பிங்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு தன்னார்வலர்கள் உதவ முன்வர வேண்டுமென, வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் உள்ளன.வால்பாறை, முடீஸ், ஹைபாரஸ்ட், சின்கோனா, அக்காமலை, பச்சமலை எஸ்டேட் பகுதிகள்; சமவெளிப்பகுதிகளான சேத்துமடை, செமணாம்பதி, தம்மம்பதி, ஆழியாறு, பருத்தியூர், ஆண்டியூர், அர்த்தநாரிபாளையம் பகுதிகள் யானைகளின் வலசைப்பாதைகளாக உள்ளன.ஆண்டு முழுவதிலும் இப்பகுதிகளில் உள்ள யானைகள், எஸ்டேட் பகுதிகளுக்குள் வருவதால், அதிக அளவில் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. அங்குள்ள ரேஷன் கடைகளை இடித்து, அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப்பொருட்களை சேதப்படுத்துகின்றன.வால்பாறை, மானாம்பள்ளியில் யானைகளின் வலசைப்பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதுடன், மனிதர்களின் பல்வேறு இடர்பாடுகளால், யானைகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றன.யானைகளின் உண்மையான வலசைப்பாதைகள் எது என்ற தகவல் இல்லாததால், வனத்துறையினர் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால், குடியிருப்புகள் அருகே யானைகள் புகுவதை கட்டுப்படுத்த முடியாமல், மனித - வனவிலங்கு மோதல் நடக்கிறது.கடந்த மூன்றரை ஆண்டுகளில் யானைகள் தாக்கி, ஆறு பேர் இறந்து, 19 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், யானைகளின் வலசைப்பாதைகளை கண்டறிந்து, 'டிஜிட்டல் மேப்' தயாரிக்கும் பணியை, வனத்துறையினர் கடந்த டிச., மாதம் துவங்கினர். இதுவரையில், 25 சதவீதம் பணி முடிந்துள்ளதால், வனத்துறையுடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்ற, 'டிரோன்' வைத்துள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில், 200 சதுர கி.மீ., அளவுக்கு 'டிரோன் மேப்பிங்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி இதுவரை, இரண்டு அதிநவீன 'டிரோன் கேமராக்கள்' வாயிலாக, தொடர்ந்து படம் எடுக்கப்பட்டு, வரைபடம் உருவாக்கும் பணி, 25 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும் 'டிரோன்' பயன்படுத்த அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. இதனால், திட்டத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், புகைப்படக்கலைஞர்கள் 'டிரோன்' வாயிலாக புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்து, வனத்துறைக்கு உதவ முன்வர வேண்டும்.அவர்கள் எடுக்கும் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஆனைமலை புலிகள் காப்பக இணையதளத்தில் அவர்கள் பெயருடன் வெளியிடப்படும்.'டிரோன் மேப்பிங்' திட்டத்தின் படி, யானைகளின் வலசைப்பாதைகள் முழுமையாக கண்டறியப்படும். இவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவும், பாதைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.வரைபட பணி முடிந்ததும், யானைகள் வந்து செல்லும் பாதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
யானைகள் எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்ததும், 'வாட்ஸ்ஆப்', 'எஸ்.எம்.எஸ்.,' வாயிலாக எஸ்டேட் மேலாளர்கள், தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மனித - வனவிலங்கு தடுப்பு குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.'கூகுள் எர்த்' இணையதளத்தில், வால்பாறையிலுள்ள பகுதிகளின் புகைப்படங்கள் இல்லை. 'டிரோன் மேப்பிங்'காக எடுக்கப்படும் புகைப்படங்கள், 'கூகுள் எர்த்' இணையதளத்திலும் வெளியிடப்படும்.இது சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்க்கும், சுற்றுலா அதிகரிக்கும். உதவ விரும்புவோர், 95666 37103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.