தேங்காய்க்கு கட்டுபடியாகும் விலையை, அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, தேங்காயை உடைத்து, தென்னை விவசாயிகள் சங்கத்தினர், குடிமங்கலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்துக்கு, தென்னை விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க உடுமலை ஒன்றிய தலைவர் ராஜகோபால், குடிமங்கலம் ஒன்றிய தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். பின்னர், தேங்காயை ரோட்டில் உடைத்து, நுாதன போராட்டம் செய்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் மாரிமுத்து நன்றி கூறினார்.* பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலக்குழு தலைவர் ஸ்டாலின் பழனிசாமி தலைமை வகித்தார்.தென்னை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் மதுசூதனன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மா.கம்யூ., தாலுகா கமிட்டி உறுப்பினர் மகாலிங்கம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.கொப்பரை தேங்காயை கிலோவுக்கு, 140 ரூபாய் விலை நிர்ணயித்து கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டும். கேரள மாநிலத்தை போல், முழு தேங்காய் கிலோ 50 ரூபாய்க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை, மீண்டும் கோவையில் அமைக்க நடவடிக்கை தேவை. தென்னை சார்ந்த உபதொழில்களை ஊக்குவிக்க வேண்டும். தென்னை மரங்களுக்கு, பயிர் இன்சூரன்ஸ் செய்து, மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தர வேண்டும்.ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணையை மானிய விலையில், வினியோகம் செய்தால், விவசாயிகள், மக்கள் என இருதரப்பினரும் பயன்பெறுவார்கள்.ஒட்டன்சத்திரத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும். நல்லாறு, ஆனைமலையாறு அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையுள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன- நிருபர் குழு -.