மதுரை ; மதுரை மாவட்டத்தில் காலிப்பணியிடங்களால் கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் அனைத்து நிலைகளிலும் பணிச்சுமை ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.வருவாய்த் துறையில் மாநில அளவில் 30 சதவீதத்திற்கு மேல் பணியிடங்கள் காலியாக உள்ளன. மதுரை மாவட்டத்தில் 20 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் அடிப்படையான வி.ஏ.ஓ., ஆர்.ஐ., துணைத்தாசில்தார் பணியிடங்கள் மக்கள் தொகைக்கேற்ப அமையவில்லை என்கின்றனர் வருவாய்த்துறையினர்.அவர்கள் கூறியதாவது: மாடக்குளம் கிராம பகுதியில் 3 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஆனால் இங்கு ஒரே ஒரு வி.ஏ.ஓ.,தான் உள்ளார். மேல்மதுரை கிராமத்தில் 5 ஸ்டேஷன்கள் உள்ளன. வடக்கு மதுரை பகுதியில் 5 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இப்பகுதிகளிலும் தலா ஒரு வி.ஏ.ஓ.,தான் உள்ளார். மதுரையில் சராசரியாக 17 கவுன்சிலர்களுக்கு ஒரு வி.ஏ.ஓ., உள்ளார்.ஜாதி, வருவாய் உட்பட பல்வேறு சான்றுகள் வழங்குவதுடன், நிலநிர்வாகம், வரிவசூல், போலீஸ் துறைக்கு இணையாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் வருவாய் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் அதற்கேற்ப பணியாளர்கள் நியமனம் இல்லை.
கணினிமயமான பின், வி.ஏ.ஓ.,க்களுக்கு மேல் உள்ள ஆர்.ஐ.,க்கு 10 ஆண்டுகளாக இணையவசதி, கம்ப்யூட்டர், லேப்டாப் கிடையாது. எல்லா சான்றுகளையும் விசாரித்து ஒப்புதல் வழங்க அலைபேசியை பயன்படுத்தி வருகின்றனர். மாநில அளவில் கடந்தாண்டு 90 லட்சம் சான்றுகளை 1200 ஆர்.ஐ.,க்கள் வழங்கி உள்ளனர், என்றனர்.வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் கூறுகையில், ''பல ஆண்டுகளாக நிரப்பப்படாத காலியிடங்களால் பணிகளில் சுணக்கம் ஏற்படுவது
இயல்பு. எனவே அவசரம் கருதி உடனே நிரப்ப வேண்டும்.இதற்காகவே அகவிலைப்படி உயர்வு, பழைய பென்ஷன் ரத்து உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (ஆக.6) சேலத்தில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்'' என்றார்.