கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
பொள்ளாச்சி, கெட்டிமெல்லன்புதுார் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஐ., கவுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று, சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த, இருவரை பிடித்து சோதனை செய்தனர்.அவர்களிடம், 1.1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் சிங்காநல்லுாரை சேர்ந்த செல்வராஜ், 40, மற்றும் அம்பராம்பாளையத்தை சேர்ந்த அருண்வேல், 50, என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா பறிமுதல் செய்தனர்.* ஆழியாறு புளியங்கண்டி அருகே, ஆழியாறு போலீசார் கஞ்சா விற்பனை குறித்து கண்காணித்தனர். அப்போது, புளியங்கண்டி அருகே சந்தேகப்படும் படி நின்றிருந்த, வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டு, கோட்டூரை சேர்ந்த முரளிதரன், 28, என்பவரை கைது செய்தனர். அவரிடம், இருந்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பொது இடங்களிலோ, வீட்டிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்தால், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என, போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விபத்தில் ஒருவர் பலி
கிணத்துக்கடவை சேர்ந்தவர் கணேஸ், 43; தனியார் நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், கோவை, சென்றாம்பாளையம் பிரிவு அருகே பைக்கில் வந்தபோது, அதிவேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.விபத்தில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்; அவர், மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். கிணத்துக்கடவு போலீசார், கார் ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த விஜயபிரபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.