கோவை:இரு சக்கர வாகன திருட்டு தடுக்கும் நோக்கத்துடன், வாகன நிறுத்தங்களுக்கு, கோவை மாநகர போலீசார் கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர்.கோவையில், மாநகராட்சி, ரயில்வே மற்றும் தனியார் சார்பில், பல்வேறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
இவை மட்டுமின்றி, அரசு மருத்துவமனை, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றிலும் வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளன.இவற்றில் தினமும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதும், எடுக்கப்படுவதுமாக உள்ளன. இவற்றில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற புகார்கள் நீண்ட காலமாக உள்ளன. திருடப்படும் வாகனங்களை நிறுத்தி வைக்க, இவ்விடங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.இதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுபடி, வாகன நிறுத்தங்களின் உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. வாகன நிறுத்தம் நடத்துவோர் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, போலீஸ் துணை கமிஷனர்கள் விளக்கம் அளித்தனர்.வாகனம் நிறுத்துவோரிடம் சேகரிக்க வேண்டிய விவரங்கள், குறித்த காலத்தை கடந்து வாகனம் எடுக்க வருவோரிடம் சேகரிக்க வேண்டிய விவரங்கள், குறித்த காலத்தை கடந்தும் யாரும் எடுக்க முன் வராத வாகனங்களின் விவரம் அளிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வாகன நிறுத்தங்களில் கட்டாயம் 'சிசி டிவி' கேமரா நிறுவப்பட வேண்டும் என்றும், வாகனம் நிறுத்துவோர், எடுத்துச் செல்வோர் முகம் அடையாளம் பதிவாகும் வகையில், கேமரா நிறுவப்பட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.அதேநேரம், ஒவ்வொரு வாகன நிறுத்தத்திலும், அந்தந்த ஸ்டேஷன் போலீசார் சார்பில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களும் ஏராளமாக உள்ளன. அவ்வாகனங்களை மீட்டு, அவற்றுக்கு உரியவர்களை கண்டறிந்து ஒப்படைக்கவும் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, வாகன நிறுத்தம் நடத்துவோர் மத்தியில் இருக்கிறது.