அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், அறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படும் மின்தடையால் தொழில் முனைவோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.அன்னுார் பேரூராட்சி, கரியாம்பாளையம், காரேகவுண்டம் பாளையம், குன்னத்துார், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குப்பே பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில், நுாற்றுக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. விசைத்தறிகள், கிரில் ஒர்க்சாப்புகள் இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இதுகுறித்து அன்னுார் பகுதி மக்கள் கூறுகையில்,'தினமும் குறைந்தது, 10 முறை மின்சாரம் தடைபடுகிறது ஒவ்வொரு முறையும், மின் தடைக்கு பிறகு ஐந்து முதல் 15 நிமிடங்கள் கழித்து மின்சாரம் வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்திலும் மின்தடை ஏற்படுகிறது.மேலும் குறைவான தாழ்வழுத்தத்தில் வருவதால் பல இயந்திரங்கள் இயங்குவதில்லை. சீரான ஒரே அளவிலான மின்சாரம் சப்ளை ஆவதில்லை. இதனால் சிறு, குறு தொழிற்சாலை நடத்துவோர் மற்றும் வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அரசு மின் தடைக்கான நேரத்தை அறிவித்து அந்த நேரத்தில் மட்டும் மின்தடை ஏற்படுத்தினால், அதற்கு தகுந்தாற்போல் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு வசதியாக இருக்கும்.அறிவிக்கப்படாத இந்த மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்,' என்றனர்.