மதுரை : விருதுநகர் மாவட்டத்தில் சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீர்நிலைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வேலி அமைக்கும் என எதிர்பார்க்க முடியாது என கருத்தை பதிவு செய்துள்ளது.
சிவகாசி முருகதாஸ் தாக்கல் செய்த மனு: எனது மகன் நண்பர்கள் 3 பேருடன் 2014 ஆக.,31 ல் வெற்றிலையூரணியிலுள்ள ஊருணியில் குளிக்கச் சென்றார். நான்கு சிறுவர்களும் மூழ்கி இறந்தனர்.
தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கியது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் சம்பவம் நடந்துள்ளது. ரூ.2 லட்சமாக உயர்த்தி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதாக உறுதியானால் மட்டுமே, இழப்பீடு வழங்க உத்தரவிட முடியும். சிறுவர்கள் தாங்களாகவே நீர்நிலைக்கு சென்று குளித்துள்ளனர். நீரில் மூழ்கி இறந்துள்ளனர். கிராமங்களில் உள்ள கண்மாய்கள் பொது பயன்பாட்டிற்குரியவை.
இவற்றிற்கு உள்ளாட்சி அமைப்புகள் வேலி அமைக்கும் என எதிர்பார்க்க முடியாது. சம்பவம் உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. அரசு தரப்பில் அலட்சியமாக இருந்ததாக கூற முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.அரசு அனுமதித்த ரூ.50 ஆயிரம் மனுதாரரால் பெறப்படவில்லை எனில் சமூகநலத்துறை செயலாளர் தாமதமின்றி தொகையை வழங்க வேண்டும் என்றார்.