பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை உண்டு, உறைவிட பள்ளியின் காம்பவுண்ட் சுவரை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது.கோவை வடக்கு, புறநகர் பகுதியில் மேற்கு மலை தொடர்ச்சி ஒட்டிய மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருந்தாலும், காட்டு யானைகளின் வரவை முழுமையாக தடுக்க முடியவில்லை.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை குஞ்சூர்பதி கிராமத்தில் பழங்குடி இன குழந்தைகள் படிக்கும் உண்டு, உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. நேற்று காலை, 4:00 மணிக்கு இப்பகுதிக்குள் வந்த காட்டு யானை ஒன்று, பள்ளியின் வடக்கு பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவரை இடித்து உள்ளே நுழைந்தது. அங்குள்ள சத்துணவு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை தின்று சேதப்படுத்தியது. குடிநீர் பைப்பை உடைத்து எறிந்தது. பின்னர் அப்பகுதியில் சுற்றிய யானை தெற்கு பகுதியில் உள்ள இன்னொரு காம்பவுண்ட் சுவரை உடைத்து வெளியேறியது.கடந்த கல்வியாண்டில், இதே பள்ளியின் காம்பவுண்ட் சுவரை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது. அதை செப்பனிட்டு சீர் செய்துள்ள சூழலில், மீண்டும் யானையால் காம்பவுண்ட் சுவர் இடித்து சேதமாக்கப்பட்டுள்ளது. யானை, பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த போது, உறைவிட பள்ளியில் பழங்குடியின குழந்தைகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.