மூணாறு : கேரளாவை உலுக்கிய சம்பவமான மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பலியான துயரம் நடந்து இன்றுடன் (ஆக.6) இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. அதில் நான்கு பேரின் உடல்கள் கிடைக்காமலும், அரசு அறிவித்த உதவிகளை பெற இயலாமலும் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.
அங்கு 2020 ஆக.6ல் கொட்டித் தீர்த்த 30 செ.மீ. மழை பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. தேயிலைத் தோட்ட பணிகளையும், சுயதொழில்களையும் வழக்கம்போல் முடித்து விட்டு இரவு உணவுக்கு பின் உறங்கச் சென்றவர்கள் மறுநாள் விடியலை பார்க்க இயலவில்லை.கொட்டித் தீர்த்த பலத்த மழையால் ஆக.6ல் இரவு 10:45 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் உள்பட எட்டு கட்டடங்கள் உருத்தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. அதில் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் என பலியான 70 பேரில் பலர் தூக்கத்திலேயே உயிரை விட்டனர்.
இடிபாடுகளில் சிக்கிய சிலர் அதிகாலை வரை குற்றுயிராய் கிடந்து காப்பாற்ற இயலாமல் இறந்தனர். பலியான அனைவரும் தமிழகத்தில் கயத்தாறு, புளியங்குடி உள்பட பல்வேறு பகுதிகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்களாகும். மின்சாரம், தொலை தொடர்பு சேவை ஆகியவை துண்டிக்கப்பட்டதால் ஆக.7ல் காலையில் தான் அந்த துயர சம்பவம் வெளியுலகத்திற்கு தெரியவந்தது.
19 நாட்கள் நடந்த மீட்டு பணியில் 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மூணாறில் எம்.ஜி. காலனியைச் சேர்ந்த சண்முகநாதன் மகன் தினேஷ்குமார் 22, பெட்டிமுடியைச் சேர்ந்த கஸ்தூரி 30, மகள் பிரியதர்ஷினி 6, மற்றும் கார்த்திகா 21 ஆகியோர் மாயமாகினர். அவர்களை இறந்தவர்களில் பட்டியலில் உட்படுத்தி அரசு வழங்கும் அனைத்து சலுகைகளை மூன்று மாதத்திற்குள் வழங்குமாறு கேரள அரசு உத்தரவிட்டது.
நிதியுதவி
நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம், கேரள அரசு ரூ.5 லட்சம், தமிழக அரசு ரூ.3 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் மாயமான நான்கு பேரின் உடல்கள் கிடைக்காமலும், அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் வழங்காததால் அரசு அறிவித்த சலுகைகளை பெற இயலாமலும் உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.அதுகுறித்து இரண்டு மகன்களை இழந்த சண்முகநாதன் கூறுகையில், பெட்டிமுடியில் வசித்த சகோதரர் வீட்டிற்குச் சென்ற எனது மகன்கள் தினேஷ்குமார், நிதிஷ்குமார் ஆகியோர் நிலச்சரிவில் நெருங்கிய உறவினர்கள் 21 பேருடன் இறந்தனர்.
அந்த துயரத்தை மறக்க இயலாத நிலையில் மகன் தினேஷ்குமாரின் உடல் கிடைக்காததால் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். அரசு அறிவித்த சலுகைகள் நிதிஷ்குமாருக்கு கிடைத்தது. தினேஷ்குமாருக்கு இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் சலுகைகளை பெற இயலவில்லை.நிதிஷ்குமாரின் உடல் கிடைத்தபோதும் தமிழகத்தில் தவறுதலாக தினேஷ்குமாரின் உடல் கிடைத்ததாக பதிவு செய்யப்பட்டதால் அங்கு அரசு வழங்கிய சலுகைகளையும் பெற இயலவில்லை, என சோகத்துடன் தெரிவித்தார்.