கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தமிழக முதல்வரின் கோவை வருகை, ஆக.,23ல் நடக்கவுள்ளது; அன்று நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முக்கியமான அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிடவும், நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டங்களை துவக்கி வைக்கவும், பல முறை கோவைக்கு, முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். கோவையில் உள்ள தொழில் முனைவோரையும் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு சென்றுள்ளார்.புதிய தொழிற்பேட்டை, அவிநாசி ரோடு மேம்பாலம், உக்கடம் மேம்பாலம் நீட்டிப்பு, மத்திய சிறையை இடம் மாற்றி செம்மொழிப் பூங்கா அமைப்பது, கோவை மெட்ரோ ரயில் திட்டம், லாலி ரோடு சந்திப்பில் பாலம் என, தொழில் முனைவோரின் கோரிக்கைகள், முதல்வரிடம் நேரடியாக முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை மட்டும், முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அறிவித்தார். ஆனால், அப்பணியும் வெறும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது.இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதியன்று, கோவைக்கு முதல்வர் வருவதாக இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, அவருடைய வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆக., 23 அன்று, கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக, ஈச்சனாரியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.விழாவில் பங்கேற்கும் முதல்வர், உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக, கோவைக்கு சில திட்டங்களை அறிவிப்பதோடு, தமிழகம் தழுவிய முக்கிய திட்டத்தையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவிப்பார் என்ற தகவல் பரவியுள்ளது. இம்முறையும் முதல்வர் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் செல்லும் பட்சத்தில், கோவையை தி.மு.க., அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டு மேலும் வலுப்பெறும்
-நமது நிருபர்-.