கோவை:சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில், 190 மி.மீ., மழை பதிவானதால், 41.23 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது.சிறுவாணி அணை, கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளாக, பாதுகாப்பு காரணங்களை கூறி, 5 அடி குறைவாக, 45 அடிக்கே நீர் இருப்பு வைக்கப்பட்டு வந்தது.கடந்த மாதம், 43 அடியாக நீர் மட்டம் இருந்தபோது, வரத்து அதிகமாக இருந்ததாக கூறி, நீரை வெளியேற்றிதால், 37 அடியாக நீர் மட்டம் குறைந்தது. அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், கேரள நீர்ப்பாசனத்துறையினரிடம் பேசினர்.சில நாட்களாக அணை பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர்ப்பிடிப்பு பகுதியில், 190 மி.மீ., அடிவாரத்தில், 61 மி.மீ., பெய்ததால், நீர் மட்டம், 41.23 அடியாக அதிகரித்துள்ளது.மழை தொடர்வதால், கேரள நீர்ப்பாசனத் துறையினர் மீண்டும் மதகை திறந்து, தண்ணீரை வெளியேற்றி விடக்கூடாது என்பதால், அணை நிலவரங்களை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கோவை குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று அணையில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கேரளா நீர்பாசன துறை அதிகாரிகளை சந்தித்து, 45 கண்டிப்பாக நீர் தேக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.