மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்விப்பேரவைக் கூட்டத்தில் புதிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உறுப்பினர்கள் விவாதமின்றி ஒரு மணி நேரத்தில் முடிந்தது.துணைவேந்தர் குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு பதிவாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சிண்டிகேட் உறுப்பினர்கள் தங்கராஜ், நாகரத்தினம் பங்கேற்றனர்.துணைவேந்தர் பேசியதாவது:
கிராம மாணவர்களும் பயன்பெறும் வகையில் இளங்கலை பட்டப் படிப்புகள், பி.ஜி., டிப்ளமோ படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிஷ் மொழிப் படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. அதுபோல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் கற்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பேராசிரியர், ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாடுக்கான பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.உறுப்பினர் வேளாங்கண்ணி ஜோசப் பேசுகையில், ''தேர்வாணையர், பதிவாளர், டீன் உள்ளிட்ட முக்கிய பதவிகளை விரைவில் நிரப்ப வேண்டும்.
அதுவரை அப்பதவிகளில் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்," என்ற போது, துணைவேந்தர் குறுக்கிட்டு, "கல்விப் பேரவை தொடர்பாக மட்டும் பேச வேண்டும்," என்றார்.அப்போது, "பல்கலை உயர் பதவிகளை நிரப்புவது மாணவர்கள் நலன்சார்ந்த விஷயமே" என உறுப்பினர் பதில் கூற, "அனுமதிக்கப்பட்ட தீர்மானங்கள் தவிர மற்ற விஷயங்கள் பேச வேண்டாம்" உறுப்பினர் பேச துணைவேந்தர் அனுமதி மறுத்தார்.புதிய உறுப்பினர்களாக தேர்வான உதவி பேராசிரியர்கள் செல்லப்பாண்டி, ரமேஷ், சதாசிவம், உதயகுமார், பேராசிரியர் அசோகன் ஆகியோருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பல்கலை பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், உளவியல், பி.பி.ஏ., பி.ஏ., (கூட்டுறவு) உள்ளிட்ட இளங்கலை பட்டம், டிப்ளமோக்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒரு மணிநேரத்தில் கூட்டம் முடிந்தது.
மொத்தம் 70 உறுப்பினர்களில், 32 பேர் மட்டுமே பங்கேற்றனர்.துணைவேந்தர் கூறுகையில், "பல்கலையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்படும். சம்பள பிரச்னை இனி ஏற்படாது. தொலைநிலை கல்வித் திட்டம் மேம்படுத்தப்படும். அனுமதியின்றி பல்கலை கல்வி மையம் செயல்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காலி இடங்களுக்கு சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவர்," என்றார்.