நோய் பரவும் அபாயம்
உடுமலை நகராட்சி சந்தை பஸ் ஸ்டாண்ட் அருகே, ராஜேந்திரா ரோட்டில் உள்ளது. இங்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகியுள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திகேயன், உடுமலை.
மக்கள் பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே மழை நீர் செல்ல வழியில்லாமல் ரோட்டில் செல்கிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே மழைநீர் தேங்காமல் சீராக செல்லும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவராமன், உடுமலை.
பணி விரைவுபடுத்தணும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அரசுத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகனசுந்தரம், உடுமலை.
இருளில் ஆற்றுப்பாலம்
தேசிய நெடுஞ்சாலையில், அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு பிரதிபலிப்பான், தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அங்கு நெடுஞ்சாலைத்துறையினர் தெருவிளக்கும், பிரதிபலிப்பானும் அமைக்க வேண்டும்.- சுரேஷ், உடுமலை.
சேதமடைந்த ரோடு
உடுமலை ராமசாமிநகர் ரயில்வே கேட் அருகில், ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாகக்காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சேதமடைந்த இந்த ரோட்டை, நகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.- செல்வராஜ், உடுமலை.
பஸ் ஸ்டாண்ட் அமைக்கணும்
கணியூர் பஸ் நிறுத்தம், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளது. இரண்டு மாவட்டங்களிலிருந்து வரும் பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். எனவே இங்கு பேரூராட்சி அதிகாரிகள் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.- ராமசாமி, உடுமலை.
ஓடுதளம் பராமரிக்கணும்
உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஓடுதளம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் அதில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நகராட்சியினர் ஓடுதளத்தை சீரமைக்க வேண்டும்.- முருகன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை தளி ரோட்டில், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாததோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே அங்கு வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.
ரவுண்டானா வேண்டும்
மடத்துக்குளம் நால்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பல்வேறு கிராமங்களுக்கான சந்திப்பாகவும் இது இருப்பதால், போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.
நடைமேம்பாலத்தை திறக்கணும்
உடுமலை பஸ் ஸ்டாண்ட்அருகே, பயணியர் ரோட்டை கடந்து செல்வதற்காக நடை மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், பயன்பாட்டிற்கு வராததால், பயணியர் ரோட்டை கடக்க முடியாமல் திணறுகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.- சக்ரபாணி, உடுமலை.
பராமரிப்பில்லாத பூங்கா
உடுமலை, ஸ்ரீ நகரில் பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது. இதனால், அங்கு வரும் பொதுமக்கள், குழந்தைகள் ஏமாற்றமடைகின்றனர். விளையாட்டு சாதனங்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன. இதை சீரமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மகேஷ், உடுமலை.