உடுமலை:விடைத்தாள் திருத்தும் பணிக்கு மெட்ரிக் ஆசிரியர்கள் வருகை புரியாததால், அரசுப்பள்ளிகளில் உள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களும், முகாமில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான துணைத்தேர்வு கடந்த வாரம் நடத்தப்பட்டது.தற்போது, பிளஸ் 1 வகுப்புக்கான துணைத்தேர்வு நடத்தப்பட்டும் வருகிறது. அவ்வகையில், திருப்பூர் வீரபாண்டி பாரத்மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், மதிப்பீட்டு முகாம் நடத்தப்படுகிறது.இதற்காக, அரசு மற்றும் மெட்ரிக்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு, முதன்மைத் தேர்வாளர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் என பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டது.ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் முறையாக வருகை புரியவில்லை. தினமும், குறிப்பிட்ட பாடத்திற்கான விடைத்தாளைத்திருத்தம் செய்ய குறைந்தபட்சம், 30 ஆசிரியர்கள் தேவை என்ற நிலையில், மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் இருந்தனர்.இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களும் மதிப்பீட்டு பணிக்கு விடுவிக்க, பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பணி நியமனம் செய்யப்பட்ட மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள், முகாமில் பங்கேற்கவில்லை. இதனால், விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து அரசுப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்களும் இப்பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், மாணவர்களின் பாட வகுப்புகள் பாதிப்பு அடையாத வகையில் ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒரு வார காலம் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.