திருப்பூர்:திருப்பூர் அருகே, பஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.கோவை மாவட்டம் சூலுாரை சேர்ந்த வீரக்குமார், 27, சஜீத்குமார், 34, நீலாம்பூரை சேர்ந்த முருகேசன், 36, வெற்றிச்செல்வன், 40, மகேஷ்குமார், 38, கிஷோர்குமார் ஆகியோர் நண்பர்கள். நேற்று முன்தினம் இவர்கள், காரில் திண்டுக்கல்லுக்கு சென்று விட்டு, கோவை புறப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அடுத்த காக்காப்பள்ளம் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பை தாண்டி, திருப்பூரில் இருந்து பழநி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது. வீரக்குமார், மகேஷ்குமார், முருகேசன், வெற்றிச்செல்வன் ஆகியோர் பலியாயினர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஜீத்குமார் பரிதாபமாக பலியானார். பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. கிஷோர்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.போலீசார் கூறுகையில், 'விபத்தில், ஓடு பாதையை விட்டு கார் வெளியே சென்றுள்ளது. அதி வேகத்தாலும், பயண களைப்பு காரணமாகவும் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. விபத்து நடந்த இடத்தில், சாலையின் தன்மை உட்பட பலவற்றை கருத்தில் கொண்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.