வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில், பிரகதாம்பாள் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பூர திருவிழாவில் தேர் கவிழ்ந்ததில், ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
![]()
|
இப்போது, கோவில்களில் நடைபெறும் தேரோட்டத்தின் போது, தேர் குடை சாய்ந்து குப்புற விழுவது, சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதற்கு, கோவில் நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் என பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தேர் பவனி வரும் சாலைகள் சரியாக இருக்கின்றனவா... மின் இணைப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவா என்று அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்வதில்லை.
கோவில்களில் கிடைக்கும் வருமானத்தை, எப்படி எல்லாம் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் திட்டமிடுகின்றனரே தவிர, கோவிலில் இறைவனுக்கு நடைபெறும் நித்ய பூஜைகள் சரியாக நடக்கிறதா என்று கவலைப்படுவது இல்லை. அதேபோல, கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும் முன், என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டுவதில்லை.
தேரோட்டம் நடைபெறும் கோவில் எனில், முன்னதாகவே தேரின் நிலைமை பற்றி ஆய்வு செய்வதில்லை; அதில், குறைபாடுகள் இருந்தால், சரிசெய்யவும் முற்படுவதில்லை. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் இதுவெனில், சாலைகள் நிலைமை படுமோசம்.
![]()
|
எந்தச் சாலையில் எங்கு பள்ளம் தோண்டியிருப்பரோ என்று அஞ்சி தான், வாகனத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. நன்றாக இருக்கும் சாலைகளை தோண்டுவோர், அதை மீண்டும் முறையாக சரிசெய்வதில்லை. நடக்கக்கூட முடியாத அளவுக்கு மேடு, பள்ளங்களாக்கி விடுகின்றனர்.
தேர்த் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விழுவதை, அரசுக்கு மட்டுமின்றி, தங்களுக்கும் அபசகுனமாகவே மக்கள் பார்ப்பர். எனவே, இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் தவிர்க்க வேண்டும். அறநிலையத் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement