விருதுநகர் : விருதுநகரில் இரவு முழுதும் விட்டு விட்டு பெய்த மிதமான மழையால் பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு 'மேன்ஹோல் லீக்' ஆனது. இதில் புதியதாக போடப்பட்ட ரோடும் சேதமடையும் அபாய நிலையை எட்டி உள்ளது.விருதுநகர் ஆக.3 இரவு 10:00 மணி முதல் லேசான துறல் பெய்ய துவங்கியது. அதை தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இதில் ரோடுகள், தெருக்களில் வாறுகால் நிரம்பியதுடன் அதன் வழியாக பாதாளசாக்கடை பைப்லைனுக்குள்ளும் மழைநீர், குப்பை புகுந்து அடைப்பை ஏற்படுத்தியது.
இதனால் ஏ.ஏ.,ரோடு, கட்டையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 'மேன்ஹோல் லீக்' ஏற்பட்டது.இதில் ஏ.ஏ., ரோடு புதிதாக போடப்பட்ட ரோடு. 'மேன்ஹோல் லீக்' ஆனால் ரோட்டை தோண்டி சரிப்படுத்துவதை நகராட்சி நிர்வாகம் வாடிக்கையாக கொண்டுள்ளதால் புது ரோடும் சேதமடைய வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் மழைநேரம் என்பதால் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி தொற்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பம்பிங், லிப்டிங் ஸ்டேஷன்கள் முடங்கி கிடப்பதால் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பாதாளசாக்கடை கழிவுநீர் கடத்த வழியின்றி அப்படியே முடங்கி கிடக்கின்றன. இதனால் அழுத்தம் காரணமாக அவை மேன்ஹோல் வழியாக 'லீக்' ஆகி விடுன்றன. மழைக்காலம் வந்தாலே இது பெரும் தொல்லையாக இருந்து வருகிறது.வட கிழக்கு பருவமழை பெய்வதற்குள் அடைப்பு, கழிவுநீர் கடத்தாதது போன்ற காரணங்களால் 'மேன்ஹோல் லீக்' ஆவதை தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.