சேலம்-சேலம் மாநகராட்சி கூட்ட அரங்கில் திடக்கழிவு மேலாண் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் தேசிய பசுமை தீர்ப்பாயம், தென் மண்டல கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தலைமை வகித்து பேசியதாவது:சேலம் மாநகராட்சி தற்போது தூய்மையான நகரமாக மாறி வருகிறது. குப்பை உடனடியாக அகற்றப்படுவதால் இது சாத்தியமாக உள்ளது. சுகாதாரமாக இருந்தால் தான் அடுத்த கட்ட நிலைக்கு நாம் செல்ல முடியும். பள்ளி மாணவ- மாணவியர், பெற்றோரிடம், மட்கும், மட்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்து விளக்கி கூற வேண்டும். மட்காத குப்பையில் பிளாஸ்டிக் போன்ற பொருட்களையும் தரம் பிரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ், மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, ஜோதிமணி, அஸ்தம்பட்டி மண்டலம், 6வது வார்டு என்.ஜி.ஜி.ஓ., காலனியில், நகருக்குள் வனம் திட்ட மரம் நடும் விழாவில் பங்கேற்றார். திருநகர் பகுதியில் வீடுதோறும் சென்று, மக்களிடம் குப்பை சேகரிப்பதை பார்வையிட்டார். 12வது வார்டில் காக்காயன்காடு நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம், மூக்கனேரி அபிவிருத்தி பணி, 23வது வார்டில் மான்குட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.