திருமங்கலம் : திருமங்கலம் அருகே துவக்கப்பள்ளி கட்டடத்தை சீரமைக்ககோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 10 நாட்களாக குழந்தைகளின் கல்வி பாதித்துள்ளது.கரடிக்கல் ஊராட்சி செட்டிக்குளத்தில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது. சேதமடைந்த பள்ளி கட்டடத்தை பராமரிக்கும்படி பெற்றோர் பலமுறை வலியுறுத்தினர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் பள்ளி இயங்கியது.பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி பெற்றோர், மாணவர்கள் 10 நாட்களுக்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில், பள்ளிக் கட்டடத்தை ஓராண்டுக்குள் சீரமைக்க வேண்டும், பள்ளிக் குழந்தைகளை கல்வி அதிகாரிகள் உதவியோடு மாற்றுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் தாசில்தார் பரிந்துரைத்தார்.
ஆனால் பெற்றோர் ஏற்கவில்லை.நேற்று ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதிகாரிகள் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், 'வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டுமெனில் 4 கி.மீ., நடக்க வேண்டும். ரோடுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. பள்ளியை சீரமைக்க வேண்டும் அல்லது அப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும். அப்போதுதான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்' என்றனர். இதனால் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.