இடைப்பாடி-''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.க., அரசு எதுவும் செய்யவில்லை,'' என, சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன் தெரிவித்தார்.மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட உபரிநீரால், சங்ககிரி, தேவூர் அருகே, காவேரிப்பட்டியில், 50க்கும் மேற்பட்ட வீடுகளை, தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக, அங்கு மிகவும் பாதிக்கப்பட்ட, 9 குடும்பங்களை சேர்ந்த, 31 பேர், நேற்று முன்தினம் முதல், அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, காவேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி பரிசல் துறை, மதிகாரன்திட்டு, தோப்புக்காடு ஆகிய பகுதிகளில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, சங்ககிரி எம்.எல்.ஏ., சுந்தரராஜன், நேற்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், குடியிருப்புகளை பார்வையிட்டார். முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மதிய உணவு பொட்டலங்களை வழங்கினார்.தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணை உபரிநீரால் இப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடியா தி.மு.க., அரசு, மற்ற பகுதிகளை எப்படி கண்டுகொள்ளவில்லையோ, அதேபோல் இப்பகுதியையும் கண்டுகொள்ளவில்லை. தி.மு.க., அமைச்சர்களோ, பொறுப்பாளர்களோ கூட, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வரவில்லை. ஆய்வும் செய்யவில்லை. அடுத்து, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இப்பகுதி மக்களின் குறைகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.