மதுரை : 'மதுரையில் இலந்தைகுளம், வடபழஞ்சியில் ஐ.டி., பூங்காக்கள் உள்ள நிலையில் கூடுதலாக பூங்கா அல்லது 'மினி டைடல்' பூங்காக்கள் துவங்க வேண்டும்' என மதுரை இளைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையில் பெரிய ஐ.டி., நிறுவனங்கள் அடங்கிய டைடல் பூங்காவை போல் தமிழகத்தில் பிற நகரங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுரடியில் மினி டைடல்' பூங்காக்கள் அமைக்கப்படும்.
தேவையான நிலமும் வழங்கப்படும். அரசின் 'டிட்கோ' நிறுவனம் பங்குதாரராக செயல்படும். முதற்கட்டமாக விழுப்புரம், துாத்துக்குடி, வேலுார், திருப்பூர் நகரங்களில் அமைக்கப்படும் என சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு தெரிவித்தது. மதுரை இளைஞர்கள் கூடுதலாக ஐ.டி., பூங்காக்கள் வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தும் மினி டைடல் பூங்காக்கள் பட்டியலில் வழக்கம் போல் மதுரையை மட்டும் தமிழக அரசு மறந்தது. ஆனால், மதுரையை பூர்வீகமாக கொண்டவர்களில் பலர் சிறிய ஐ.டி., நிறுவனங்களை ஆங்காங்கே நடத்துகின்றனர். மெகா டைடல் பூங்கா துவங்கும் வரை இங்குள்ள சிறிய ஐ.டி., நிறுவனங்களை ஒன்றிணைத்து 2மினி டைடல்' பூங்காக்களை அமைக்கலாம்.
இதனால் மதுரை, தென்மாவட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். பூங்காக்களை சார்ந்து பல சிறு தொழில்களும் பெருகும். தொழிற்பேட்டைகள், தொழிற்சாலைகள் ஒரு புறம் விரிவடைந்தாலும் மதுரையில் ஐ.டி., பூங்காக்கள் பெரியளவில் வந்தால்தான் முழுமையான 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாறும். பெரு நிறுவனங்களை ஈர்க்க ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதி அவசியம். அதை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.சினிமா, அரசியல் வெற்றிக்கு மட்டும் மதுரை மக்களையும், இளைஞர்களையும் பயன்படுத்தி ஆதாயம் பார்ப்பவர்களை அடையாளம் கண்டு அவர்ளை புறம்தள்ளினால் மட்டுமே நம் கனவு திட்டங்கள் நிஜமாகும்.