சேலத்தில் 55 பேருக்கு தொற்றுசேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்படி சேலம் மாநகராட்சியில், 12 பேர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, ஆத்துார், சேலம் ஒன்றியம், சங்ககிரி, ஓமலுார் தலா, 2, மேட்டூர் நகராட்சி, அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, இடைப்பாடி, தாரமங்கலம், வீரபாண்டி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, தர்மபுரி, 5, செங்கல்பட்டு, 4, திருச்சி, நாமக்கல், மதுரை தலா, 3, வேலுார், ஈரோடு தலா, 2 பேர் என, பிற மாவட்டத்தினர், 22 பேர், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என, ஒட்டுமொத்தமாக, 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்சேலம்: சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், மாநகர் வி.சி., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் பொருளாளர் காஜாமைதீன் தலைமை வகித்தார். அதில், மாட்டிறைச்சி கடைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை, மாநகராட்சி, போலீசாரின் அராஜக போக்கை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாட்டிறைச்சி கடை மீண்டும் செயல்படவும், தடுக்கும் பா.ஜ., மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.தபால் நிலையத்தில் தேசிய கொடிஏற்காடு: இந்திய நாட்டின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, நாடு முழுதும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால், ஏற்காட்டில் உள்ள டவுன் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனையை, ஏற்காடு அஞ்சலக அதிகாரி தீபா தொடங்கி வைத்தார். பின், வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வாங்கினர்.நாளை 33வது தடுப்பூசி முகாம்சேலம்: மாவட்டத்தில் நாளை, 33வது மெகா தடுப்பூசி முகாம், 2,690 மையங்களில் நடக்க உள்ளது. காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் முகாமில் லட்சம் பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்பணியில், 15 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள், வீடுதோறும் சென்று தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் கண்டு, முகாமுக்கு அழைத்து வந்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முகாமில் செலுத்தி கொள்ள, கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.மாணவருக்கு காய்கறி விதை பரிசுபனமரத்துப்பட்டி: சாமகுட்டப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், 75வது சுதந்திர தின அமுத பெரு விழா நேற்று நடந்தது. அப்பள்ளியை சேர்ந்த மலைக்கிராம மாணவ, மாணவியர், நாட்டுப்பற்று மிக்க பாடல், கவிதை, பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகளில் அசத்தினர். பங்கேற்ற, 200 பேருக்கும், காய்கறி விதைகள் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, ஆக., 15ல், 75வது சுதந்திர தின விழாவில், பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் மாலதி, பனமரத்துப்பட்டி வட்டார தோட்டக்கலை அலுவலர் தனபாக்கியம், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.செங்கல் உற்பத்தி கடும் பாதிப்புசேலம்: சேலம் மாவட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் நிர்வாகிகள், நேற்று சேலம் கனிமவள துணை இயக்குனரிடம் அளித்த மனு: சூளைக்கு மண் அள்ள அனுமதி வழங்காததால், 15 மாதமாக, மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். ஆனால் அனுமதியின்றி சிலர், திருட்டுத்தனமாக செங்கல் சூளைக்கு தேவையான மண்ணை கடத்தி வந்து, அதிக விலைக்கு விற்று வருகின்றனர். அதனால் உண்மையாக தொழில் செய்வோருக்கு மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து, மண் அள்ள அனுமதித்து, செங்கல் தொழில் செய்ய உதவ வேண்டும்.