சேலம்,-மத்திய அரசுக்கு எதிராக, காங்., கட்சியினர், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே, நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாநகர் காங்., அலுவலகத்தில் இருந்து, அதன் தலைவர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். பிரட்ஸ் ரோடு வழியே வந்த ஊர்வலம், கலெக்டர் அலுவலகம் அருகே வந்ததும், சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசு, அமலாக்கத்துறையை கண்டித்தும், ஜி.எஸ்.டி.,யை கைவிடவும், மத்திய அரசு பதவி விலகவும் முழக்கமிட்டனர். தொடர்ந்து வாகனங்களை மறிக்க முயன்றதால், போலீசார் தடுத்து நிறுத்தி, 35 பேரை கைது செய்தனர். பின், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில், விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைககள் குறித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து, சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியும் கலைந்து செல்லாததால், அர்த்தனாரி உள்பட 35 பேரை, கைது செய்து பின் விடுவித்தனர்.