ஈரோடு,-ஈரோடு பகுதியில் ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதத்தை தொடர்ந்து, அம்மன் கோவில்களில் ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்தனர்.ஆடி மாதம் மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. அதிகாலை முதல் அம்மன் கோவில்களில் பெண்கள் பால், மஞ்சள், குங்குமம், பூக்கள் மற்றும் மாலை வழங்கி வழிபட்டனர்.ஈரோடு பெரிய மாரியம்மன் தங்க கவசத்திலும், மாணிக்கம்பாளையம் மாரியம்மன் வெள்ளி கவசத்திலும், சூளை அங்காள பரமேஸ்வரி வளையல் அலங்காரத்திலும், சின்னவலசு மகாமாரியம்மன், 1,008 மஞ்சள் கயிறுடன் கூடிய திருமாங்கல்யத்துடனும், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் புடவை காரி அலங்காரத்திலும் காட்சியருளினர்.வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்பட்டதால், வீடுகளில் சிறப்பு பூஜை செய்து, சுமங்கலிகளுக்கு மங்கல பொருட்கள், இனிப்பு வழங்கி வழிபட்டனர். கோவில்களில் சிறப்பு பூஜை செய்தும், வளையல், குங்குமம், பூ வழங்கினர். இவ்விரு விழாவால் பல கோவில்களில் பக்தர்கள் மற்றும் கோவில் சார்பில் அன்னதானம், கூழ் வழங்கப்பட்டது.* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள திருக்குண்டத்தில், பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் மொடச்சூர் தான்தோன்றியம்மன், சாரதா மாரியம்மன், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.* வரலட்சுமி விரதம், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி, மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. பிளேக்மாரியம்மன் கோவில் வளாகத்தில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஊத்துக்குளியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரியம்மன், ஆதிபராசக்தி அம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதம், ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. * பவானி அருகே காடையம்பட்டியில், வீரமாத்தியம்மன் கோவிலில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகே காமாட்சியம்மன் சிறப்பு புடவை அலங்காரத்திலும், அந்தியூர் பத்ரகாளியம்மன், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரியம்மன் கோவிலிலும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.