கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி வழியாக தொடர் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, எஸ்.பி., பாலாஜி கிருஷ்ணகிரி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு தீவிர சோதனை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த, ஜூலை, 12ல், ஓசூர்- பாகலூர் சாலை, ஜி.மங்கலம் அருகே லாரியில், 50 கிலோ அளவிலான, 600 மூட்டைகளில் கடத்திய, 30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், காரிமங்கலத்தை சேர்ந்த சபீர், 38, பிலால், 32 ஆகியோரை போலீசார் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவர் பர்கத்தை தேடி வருகின்றனர். இதில் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி பரிந்துரைத்தார். இதையடுத்து சபீரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சபீர், சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.