வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019ல் ஏற்படுத்தி இருக்க வேண்டும். கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமானது.அடுத்த ஊதிய உயர்வுக்கான பேச்சு துவங்க வேண்டிய நிலையில் அதற்கு முந்தைய ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தமே ஏற்படாதது மிகுந்த வேதனை அளிக்கும் செயல்.'தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களான நிலையில் எந்த கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பல முறை பேச்சு நடந்தும் முடிவு காணப்படவில்லை.அடுத்தகட்ட பேச்சுக்கான தேதியை குறிப்பிடாதது தொழிலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற அனைத்து தொழிற்சங்கங்களையும் முதல்வர் அழைத்து பேசி உடனடி தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.