செஞ்சி : செஞ்சி காந்தி பஜாரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செஞ்சி, காந்தி பஜாரில் சாலையின் இரு பக்கமும் புதிதாக கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. அதனையொட்டி, செஞ்சி கூட்ரோட்டில் சிறு பாலம் கட்டியுள்ளனர்.இதற்காக கூட்ரோட்டில் இருந்து காந்தி பஜார் செல்லும் சாலையில் கடந்த 3 மாதங்களாக போக்குவரத்துக்கு தடை செய்திருந்தனர். சாலையில் வாகனங்கள் செல்லாததால் அதனை சாதகமாக பயன்படுத்தி பழம், பூ, காய்கறி கடைகள் என சாலையில் அதிகளவில் வைக்கப்பட்டன.
பாலம் வேலை முடிந்து இந்த வாரம் துவக்கத்தில் மீண்டும் போக்குவரத்தை துவக்கியது. அதன் பிறகும் சாலையில் கடை நடத்தியவர்கள் காலி செய்யாமல் சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருகின்றனர்.இதனால் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.காலையிலும், மாலையிலும் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
காந்தி பஜாரில் போக்குவரத்து நிறுத்திய பிறகு போலீசார் இந்த பக்கம் வருவதே இல்லை. இதனால் தாறுமாறாக கடைகளை நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.எனவே போலீசார் காந்தி பஜாரில் கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.