கண்டமங்கலம் : கண்டமங்கலம் பழைய காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரதான குடிநீர் குழாயில் ஒரே இடத்தில் நேற்று 4வது முறையாக உடைப்பு ஏற்பட்டு அதிகளவு குடிநீர் வீணாகி வருகிறது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக ஜே.சி.பி., மூலம் தோண்டப்படும் பள்ளத்தால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.கண்டமங்கலம் பழைய காவல் நிலையம் அருகே சாலையோரம் செல்லும் பிரதான குடிநீர் குழாயில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு, சீரமைக்கப்பட்டது.அடுத்த 3 நாட்களில் மீண்டும் அங்கு உடைப்பு ஏற்பட்டு, சீரமைக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சீரமைக்கப்பட்ட அதே பகுதியில் 4வது முறையாக உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. கண்டமங்கலம் பகுதியில் நான்கு வழிச்சாலைக்கு சிமென்ட் சாலை போடும் பணி நடப்பதால் பல டன் எடை கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், பல ஆண்டுகளுக்கு முன் 3 அடி ஆழத்தில் போடப்பட்டுள்ள பலவீனமான குடிநீர் பைப்பில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.சாலை அமைக்கப்பட்ட பின் மீண்டும் குடிநீர் பைப் உடைந்தால், சிமென்ட் சாலையை உடைத்து சீரமைப்பது கடினமாகும். எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண தரமான குடிநீர் பைப் போடப்பட்டு அதன் பின் சாலை பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.