புதுச்சேரி : 'ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத மக்கள் விரோத ஆட்சி நாட்டில் நடக்கிறது' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.
காங்., சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை மட்டும் 25 கோடியாகும். காங்., ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டது. 2014ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என கூறியிருந்தார். ஆனால், இதுவரை 50 லட்சம் பேருக்கு மட்டும்தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலம் உட்பட எங்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை.விலைவாசி உயர்வை கண்டித்து பலகட்ட போராட்டம் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஜி.எஸ்.டி., என்ற போர்வையில் அரிசி, கோதுமை, மைதாவுக்கு 5 சதவீத வரி, மோருக்கு வரி, பாலுக்கு வரி, பென்சில் ,ரப்பருக்கு வரி , மருத்துவ உபகரணங்களுக்கு வரி, மருத்துவமனையில் சேர்த்தால் அதற்கு வரி என எல்லா வரியையும் மோடி அரசு போட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இவற்றை எதிர்த்து கேட்டால் அமலாக்க துறையை ஏவிவிட்டு அரசியல் கட்சித் தலைவர்களை திட்டமிட்டு அரசு பழிவாங்குகிறது. நம் நாட்டில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. ஓட்டுபோட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மோடி அரசு மக்களை வஞ்சிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.