புதுச்சேரி : புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் மூன்று தலைமை அஞ்சலகங்களிலும், 68 துணை அஞ்சலகங்களிலும், 324 கிளை அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி தலைமை அஞ்சலக முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:75வது சுதந்திர தினத்தையொட்டி ஆசாதி கா அம்ரித் மகோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. விற்பனையை, புதுச்சேரி தலைமை அஞ்சலக முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர் துரைராஜன் துவக்கி வைக்க, கவிஞர் பாரதிதாசனின் பேரன் பாரதி பெற்றுக் கொண்டார். தேசியக் கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள மூன்று தலைமை அஞ்சலகங்களிலும், 68 துணை அஞ்சலகங்களிலும், 324 கிளை அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி, தேசியக் கொடியை பெற்றுக் கொள்ளலாம்.நிகழ்ச்சியில் புதுச்சேரி தலைமை அஞ்சலக அதிகாரி தாமோதரன், மக்கள் தொடர்புஅலுவலர்கள் கருணாகரன், குருமூர்த்தி,விற்பனை நிர்வாகி ரட்சகநாதன், அனைத்து அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.