புதுச்சேரி : புதுச்சேரியின் பழங்கால துறைமுகமான அரிக்கமேட்டின் காலத்தோடு தொடர்புடையஉள்ளூர் வணிக நகரங்களை கண்டறியும் வகையில், புராணசிங்கு பாளையத்தில் அகழாய்வு பணிகள் இன்று துவங்குகிறது.
புதுச்சேரியில் அரிக்கமேடு துறைமுகம், வெளிநாட்டு வாணி பத்தில் சிறந்து விளங் கியது. கி.மு., 200 முதல், கி.பி., 200 வரை புகழ்பெற்ற வணிகத்தலமாக அரிக்கமேடு விளங்கியது என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிக்கமேட்டில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் போன்றவைகள் மூலமாக, இங்கு கிரேக்கர்கள், ரோமானியர்கள் தங்கி நீண்ட காலத்திற்கு ஏற்று மதி, இறக்குமதி செய்தனர் என்பது உலகிற்கு தெரிய வந்துள்ளது.
இந்தளவுக்கு சிறந்த துறைமுகமாக விளங்கிய அரிக்கமேட்டிற்கு புதுச்சேரியின் எந்தந்த பகுதிகளில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்பது இன்றைக்கும் புதிராகவே உள்ளது. இந்த புதிருக்கு விடைதேடும் வகையில், அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிக தலங்களை கண்டறிந்து அகழாய்வு மேற்கொள்ள புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, திருக்கனுார் அடுத்த புராணசிங்கு பாளையத்தில் கோட்டைமேடு பம்பை யாற்றின் கரையோர பகுதி, அரிக்கமேட்டின் காலத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. எனவே, அரிக்கமேட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ததாக கருதப்படும் புராணசிங்கு பாளையத்தில் இன்று 6ம் தேதி முதல் அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
இங்கு அகழாய்வினை, தாகூர் அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக, 20 லட்சம் ரூபாயை முதல்கட்டமாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.அகழ்வாய்வுக்காக மண் சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களாக முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு, அகழாய்வு செய்ய இடமும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
அரிக்கமேடு காலத்தோடு தொடர்புடைய ரவுலட்டடு மண்பாண்டங்கள், உறைக்கிணறு, பழங்கால செங்கற்கள், பழங்கால பொருட்களின் சிதறல்கள் புராணசிங்கு பாளையத்தில் பம்பையாற்று மேற்கரையோரம் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது.இதன் காரணமாகவே, அரிக்கமேட்டிற்கு ஏற்றுமதி பொருட்களை சப்ளை செய்த அக்கால நகரங்கள், தொழிலகங்களை கண்டறியும் வகையில் அகழாய்வு செய்வதற்கு மத்திய தொல்லியல் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நகரில் இருந்து அரிக்கமேட்டிற்கு புதுச்சேரியின் எந்தந்த பகுதிகள் வழியாக பொருட்களை எடுத்து சென்றிருக்கலாம் என்றும் ஆய்வு செய்யப்பட உள்ளது. புராணசிங்கு பாளையம் ஆற்றங்கரையோரம் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித செயற்கை மாற்றமும் இன்றி மணல்மேடுகளாகவே உள்ளன.
இங்கு அறிவியல்ரீதியாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர் ஆய்வு செய்வதன் மூலம் புதுச்சேரியின் பழங்கால நகரங்களின் பெருமையும், புதையுண்டு கிடக்கும் அக்கால தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளும், பண்டைய காலத்தில் புதுச்சேரிக்கு எந்தெந்த நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தனர், இங்கிருந்து எங்கெல்லாம் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது போன்ற விபரங்கள் வெளிச்சத்திற்கு வரும்.