கடலுார் : பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் வாலிபருக்கு கடலுார் கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வி., குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் நவீன், 23; இவர், விருத்தாசலம் அருகே, பெரியம்மா வீட்டில் தங்கி பிளஸ் 1 படித்த 17 வயது மாணவியை கடந்த 2018ம் ஆண்டு, காதலிக்குமாறு அடிக்கடி வற்புறுத்தினார். இதற்கு மாணவி மறுத்துள்ளார்.
மார்ச் 2ம் தேதி, பின் தொடர்ந்து சென்று மீண்டும் காதலிக்க வற்புறுத்தியதற்கு மாணவி மறுத்தார். ஆத்திரமடைந்த நவீன், காதலிக்க மறுத்தால் கடத்திச் சென்று கற்பழித்து விடுவதாகவும், பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவத்தை மறுநாள் 3ம் தேதி தனது பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் மாணவியை சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், 4ம் தேதி அருகில் உள்ள முந்திரி தோப்பில் மாணவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊ.மங்கலம் போலீசார் நவீனை கைது செய்து, கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, இவ்வழக்கில் மாணவிக்கு தொல்லை கொடுத்து தற்கொலைக்கு துாண்டிய நவீனுக்கு 3 ஆண்டுகள் சிறை, 2,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். இறந்த மாணவியின் பெற்றோருக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் அரசு நிதியில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றுத் தர உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.