திருக்கோவிலுார் : சாத்தனுார் அணை வேகமாக நிரம்பி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலம், நந்தி துர்கா மலையில் உருவெடுக்கும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களைக் கடந்து வங்கக் கடலில் கலக்கிறது.இதன் குறுக்கே தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணைகள் உள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீரால் சாத்தனுார் அணை வேகமாக நிரம்பி வருகிறது.7,321 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட 119 அடியுள்ள அணையில் நேற்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் தற்போது 6,200 மில்லியன் கன அடி நீர் (114.7 அடி) இருப்பு உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்ட தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள மக்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை திறக்கப்பட்ட நீர் இன்று காலை 11:00 மணியளவில் திருக்கோவிலுார் அணைக்கட்டைக் கடந்து செல்லும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.