சிதம்பரம் : கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சிதம்பரம் அருகே மூன்று கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து, மேட்டூரில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக திருச்சி கல்லணை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் காலை முதல் தஞ்சை மாவட்டம், கீழணைக்கு தண்ணீர் வரத் துவங்கியது.
அதே சமயம் கீழணையில் இருந்து 20 ஆயிரம் கன அடியில் இருந்து தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை 1.20 லட்சம் கன அடி கீழணையில் உள்ள 70 மதகுகளும் திறக்கப்பட்டு கொள்ளிடத்தில் வெளியேற்றப்படுகிறது. நேற்று இரண்டாம் நாளாக காலை 1.5 லட்சம் கன அடியாக உயர்ந்தது. இரவு மேலும் அதிகரித்து 2 லட்சம் கன அடி வரை கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இரண்டாவது முறை
கீழணையில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 1.20 லட்சம் கன அடி வெளியேற்றப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக 4ம் தேதி முதல் 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைக்கரையில் இருந்து கொடியம்பாளையம் வரை கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிதம்பரம் அருகே அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, பெராம்பட்டு கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
அனைத்து தெருக்களிலும் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்தது.இக்கிராம மக்கள் அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, குமராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு தயாரிக்கும் பணியை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் இன்பா பார்வையிட்டார்.தொடர்ந்து நீர் வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கீழணை பகுதியில் ஆய்வு செய்தார். திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், அணைக்கரை உதவி செயற்பொறியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் கொள்ளிடம் பாலம் அருகே, மீட்டு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.