''எல்லாருக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை பின்பற்றக் கூடாது '' என கோவை ஈஷா யோக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் அறிவுறுத்தினார்.
'ஈஷா லீடர்ஷிப் அகாடமி' சார்பில் தலைமை பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி ஈஷா யோக மையத்தில் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் துறைகளை சேர்ந்த தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தொழில்துறையினருக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.துவக்க நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் அறிமுக வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் 'ஓரியண்டல்' ஹோட்டலின் இயக்குனர் நினா சட்ரத் ட்ரெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ரஸ்தோகி 'ட்ரூநார்த் கன்சல்டிங்' நிறுவனர் ருச்சிரா சவுதர்ய உட்பட வர்த்தக தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில் ''ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெற்றி பெற வேண்டுமானால் நன்கு கட்டமைக்கப்பட்ட வழிமுறை இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த ஒருவர் தற்போது சவாலான கட்டத்தில் தவிக்கிறார் என்றால் அவருக்கு நீங்கள்ஆதரவு அளிக்க வேண்டும்.நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் எல்லாருக்கும் ஒரே மாதிரியான அளவுகோலை பின்பற்றக் கூடாது " என்றார்.