மேற்கு வங்க சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், மொபைல்போன் திருட்டை தடுத்ததால் கொன்றதாக, வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை, தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் தெருவில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுர்பதி சர்தார், 17, என்பவர், உறவினர்களுடன் தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.கடந்த 3ம் தேதியன்று, உடல் நிலை சரியில்லாததால், சுர்பதி சர்தார் மட்டும் வீட்டில் துாங்கியுள்ளார். அவரது உறவினர்கள் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த போது, சுர்பதி சர்தார் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.தகவலின்படி வந்த தண்டையார்பேட்டை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, இருவர் சந்தேகத்திற்கிடமாக செல்வது தெரிந்தது.போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்ததில் காசிமேடு, சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த பிரபு, 22, மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது.சம்பவத்தன்று இவர்கள், சுர்பதி சர்தார் வீட்டுக்குள் நுழைத்து மொபைல்போனை திருடியுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த சுர்பதி சர்தார், இவர்களை பார்த்து கூச்சலிட்டதால், கத்தியால் கழுத்தில் வெட்டி கொன்றது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், பிரபுவை புழல் சிறையிலும் அடைத்தனர். கைதான இருவர் மீதும், திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.