சென்னை: 'தமிழகத்தில் உள்ள என்.எல்.சி., திட்டங்களுக்கு, நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, பயிற்சி பட்டதாரி பொறியாளர் தேர்வில், முன்னுரிமை வழங்க வேண்டும்' என பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி., திட்டங்கள் மற்றும் சுரங்கங்களுக்கு, நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கு, உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பயிற்சி பட்டதாரி பொறியாளர்களை நியமிக்கக் கூடாது என உத்தரவிட வலியுறுத்தி, மே 5ம் தேதி கடிதம் எழுதினேன். தற்போது, என்.எல்.சி., நிறுவனம், 'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், 300 பேரை தேர்வு செய்துள்ளது.
இதில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மிகக் குறைவு. இந்நிறுவனம் உள்ளூர்வாசிகளை புறக்கணிக்கிறது. என்.எல்.சி., நிறுவனத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, நிரந்தரப் பணி வழங்குவதை தடுக்கிறது. 'எனவே, என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு, உரிய முக்கியத்துவம் அளித்து, சிறப்புத் தேர்வு வழியாக பணி வழங்க வேண்டும்.தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, பயிற்சி பட்டதாரி பொறியாளர் பணிக்கு தேர்வு செய்வதில், முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரதமர் தலையிட்டு, விரைவில் சாதகமான முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.