'போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்' என, அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: சமூகத்தின் நச்சாக விளங்கும், போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும். அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, அரசு சட்டவழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது.அதேநேரத்தில், போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அரசின் முக்கியக் கடமை. போதையின் பாதையில் செல்லாமல், ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை, நமக்கு இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 11ம் தேதியை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்வு செய்துள்ளோம். அன்று தங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இது, அரசியல் பிரச்னை அல்ல. நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்னை. குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்னை. எனவே, இதில் உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.தொடர்ச்சியான பிரசாரம் வழியாகத் தான், போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை உணர்த்துவோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் பங்கேற்கும், சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம், வரும் 10ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார்.