'விழுப்புரம், மருதுார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கலெக்டருக்கு அபராதம் விதிக்கப்படும்' என ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன.
விழுப்புரம் நகராட்சி மருதுாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 140 ஏக்கர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் 10 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வீடுகள், கடைகள் என 390 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டனர்.'நோட்டீஸ்' கொடுத்தும் ஒருவரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றாத கலெக்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் நீதிபதி நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தார்.அதை தொடர்ந்து, மருதுார் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. அந்த பணியில், இரண்டு 'பொக்லைன்' இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆண்டாள், 65, என்பவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போலீசார் அவரிடம் பேச்சு நடத்தினர். மேலும், அங்குள்ள கோவில்களை இடிக்க முயன்றபோது, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, இரண்டு நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என அப்பகுதியினருக்கு, வருவாய் துறையினர் அவகாசம் வழங்கினர்.