தஞ்சாவூர்: தஞ்சாவூர், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக ,கரையோர கிராமங்களை ஓட்டி உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், அணைக்கு ஒரு லட்சத்தி 77 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு வரும் நீரை அப்படியே வினாடிக்கு 2 லட்சம் அளவிற்கு திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 53,720 கன அடியும் திறந்து விடப்படுகிறது.மேலும், கல்லணையிலிருந்து பாசனத்துக்காக காவிரியில் உள்ள 40 மதகுகள் வழியாக 7,000 கன அடியும், வெண்ணாற்றில் உள்ள 33 மதகுகள் வழியாக 7,002 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 6 மதகுகள் வழியாக 2,219 கன அடியும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் கோவிலடி முதல் அணைக்கரை வரை 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரையோர பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் கரைகள் உடைப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க தாழ்வான பகுதிகளில் 1.50 லட்சம் மணல் மூட்டைகள் ஆங்காங்கே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மீட்பு மையங்களும் தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்நிலையில், அய்யம்பேட்டை அருகே வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கரையோர பகுதிகளான பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு ஆகிய கிராமங்களில், வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.மேலும் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கின. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.