சென்னை:சங்கங்களில் நிலுவையில் உள்ள அபராத தொகையை வசூலிக்க, சமாதான திட்டத்தை செயல்படுத்தினால், 1,600 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, பதிவுத்துறை அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.
தமிழகத்தில், கல்வி, விளையாட்டு, கலைகள் வளர்ப்பு தொடர்பான பணிகளுக்காக, 2.40 லட்சம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1.40 லட்சம் சங்கங்கள் முறையாக பதிவை புதுப்பிக்காமல் உள்ளன.இந்த சங்கங்கள், ஆண்டறிக்கை உள்ளிட்ட விபரங்களுடன், உரிய கட்டணத்தை செலுத்தி பதிவை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறினால், ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
பெரும்பாலான சங்கங்கள் அபராதம் செலுத்த முன்வரவில்லை. எனவே, இதற்கு சமாதான திட்டத்தை அறிவித்தால், நிலுவையில் உள்ள அபராத தொகை மொத்தமாக வசூலாகும்.இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, 1.40 லட்சம் சங்கங்கள் அபராதம் செலுத்தி பதிவை புதுப்பித்தால், பதிவுத்துறைக்கு 1,600 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்காக சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான, அடிப்படை தகவல்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.நிர்வாகிகள் யாரும் இல்லாததால், செயல்படாமல் உள்ள சங்கங்களின் பெயர் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.