சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கொள்கை கூட்டணி அல்ல; கொள்ளை கூட்டணி!

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கொள்கை கூட்டணி அல்ல; கொள்ளை கூட்டணி!டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது, கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி' என்று பேசி பெருமிதம் அடைந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்திரா பிரதமராக இருந்த போது, 1975 ல் எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். தி.மு.க.,வில் ஸ்டாலின் உட்பட பலரும் அடக்குமுறைக்கு


கொள்கை கூட்டணி அல்ல; கொள்ளை கூட்டணி!டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல; அது, கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி' என்று பேசி பெருமிதம் அடைந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்திரா பிரதமராக இருந்த போது, 1975 ல் எமர்ஜென்சியை பிரகடனம் செய்தார். தி.மு.க.,வில் ஸ்டாலின் உட்பட பலரும் அடக்குமுறைக்கு ஆளாகினர். இருந்தாலும், அதை எல்லாம் மறந்து, எம்.ஜி.ஆர்., ஆட்சியை கலைப்பதற்காக, 1980 ல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார் கருணாநிதி. 'நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சியை தருக' என்ற கோஷத்தோடு பிரசாரமும் செய்தார்.
அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆரை தோல்வி அடையச் செய்வதற்காக, மொத்தமுள்ள, ௨௩௪ தொகுதிகளில், சரிபாதி இடங்களை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து, மீதி பாதி இடங்களில் தி.மு.க., போட்டியிட்டும் தோல்வி அடைந்தது.
பின், ௧௯௮௯ல் காங்கிரசுக்கு, 'குட்பை' சொல்லி விட்டு, அக்கட்சிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தேசிய முன்னணியில், வி.பி.சிங்கின் தலைமையை ஏற்றார் கருணாநிதி. ௧௯௯௯ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் வாஜ்பாயுடன் கூட்டணி அமைத்து, மிகப் பெரிய வெற்றி கண்டார்; மத்திய அரசிலும் தி.மு.க, கோலோச்சியது.
பின், பா.ஜ.,வுக்கு குட்பை சொல்லி விட்டு, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் கூட்டணி அமைத்தார் கருணாநிதி. அந்தக் கூட்டணி தான், இன்று வரை நீடிக்கிறது. ஜூலை 27ல், தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடான, 'முரசொலி' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பற்றிய வாசகம் இடம் பெற்றிருந்தது. அதில், 'தமிழகத்தை பாதித்திருந்த புற்றுநோயை நீக்க பாடுபட்ட அண்ணாதுரை, தன் இதயத்தை பாதித்திருந்த புற்றுநோயை அகற்ற மறந்திருந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1967ல் காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியதை தான், தமிழகத்தை பாதித்த புற்று நோயை நீக்க பாடுபட்டார் அண்ணாதுரை என்று, கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அதனால், வரும் ௨௦௨௪ லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் - தி.மு.க., இடையேயான கொள்கை கூட்டணி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது, அந்த நேரத்தில் தெரிந்து விடும். காலத்துக்கு ஏற்றபடி கூட்டணி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது, தி.மு.க.,வின் அரசியல் வரலாற்றில் சகஜமானது. அதனால், கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும் தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது என்று ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக உள்ளது.
மொத்தத்தில் தி.மு.க.,வின் கூட்டணி, கொள்கை கூட்டணி என்பதை விட, கொள்ளை கூட்டணி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.


ராகுலிடம் தேசப்பற்றை எதிர்பார்ப்பது வீண்!டி.ஜெயசிங்க், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அம்மாநிலத்தில், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றோரை புலனாய்வுத் துறை கண்டறிந்து கைது செய்தது; இச்செய்தி பத்திரிகைகளிலும் வெளியானது.
மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றவர்கள் அனைவரும், நம் பகை நாடான பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்கள். இவர்கள் காய்ச்சி விற்ற கள்ளச் சாராயத்தை குடித்து தான், 30 பேர் இறந்துள்ளனர்.
உண்மையிலேயே நாட்டின் மீதும், மக்களின் மீதும் பற்றுள்ளோராக இருப்பின், அந்த பாகிஸ்தான் ஊடுருவல் நபர்களுக்கு, மரண தண்டனை விதிக்கும்படி, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்; அதுவே நியாயமானது.
ஆனால், பிரதமர் கனவில் மிதக்கும் காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் என்ன சொல்கிறார் தெரியுமா? 'கள்ளச் சாராயம், போதைப் பொருள் விற்பனை செய்வோர் மீது, குஜராத் மாநில பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மாறாக அவர்களை பாதுகாக்கிறது' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
பகை நாட்டிலிருந்து ஊடுருவி, கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றோரை, காவல் துறை கைது செய்திருக்கிறது. ஆனால், பா.ஜ., அரசு அவர்களை பாதுகாக்கிறது என்று புளுகுகிறார் ராகுல். ராகுலின் கூற்றிலிருந்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மத்தியில் பா.ஜ., அரசுக்கு பதிலாக, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இருந்திருந்தால், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்ற தேச விரோதிகளை, தனி விமானத்தில் ஏற்றி, பாதுகாப்பாக அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பர்.
அதாவது, போபால் விஷ வாயு கசிவுக்கு காரணமான, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முதலாளி ஆண்டர்சனை அனுப்பி வைத்தது போல செய்திருப்பர் என்பது நிதர்சனம். அந்த காரியத்தை செய்ய முடியாத ஆதங்கத்தில், ஆட்சியில் இருப்போர் மீது சேற்றை வாரி இறைக்கின்றனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியிடமும், ராகுலிடமும் தேசப்பற்றை எதிர்பார்ப்பது வீண்.


இனி வேறு நாடகம் போடுங்க!த.சா.வித்யா லட்சுமி, ஓடல்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சீன நாட்டிற்கு அடையாளம் சீன மொழி; ஜப்பானுக்கு அடையாளம் ஜப்பானிய மொழி. அதுபோல, நம் நாட்டிற்கும் அடையாளமாக ஒரு மொழி இருக்க வேண்டும். அதுவும் நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாக இருக்க வேண்டும்.
அதை விடுத்து, ௧௦௦ ஆண்டுகளுக்கு மேலாக நம்மை அடிமைப்படுத்தி, நம் நாட்டை கொள்ளையடித்து, பெரும் கொடுமைகள் செய்த அன்னியர்கள் மொழியான ஆங்கிலம், எந்த விதத்திலும் நம் நாட்டிற்கான அடையாள மொழியாக இருக்கக் கூடாது.
நான் என் தாய் மொழியான தமிழை நேசிக்கிறேன். அதே நேரத்தில், பிற மொழிகளை நேசிக்கும் பண்பும் என்னிடம் இயல்பாகவே இருப்பதால், எந்த மொழியையும் என்னால் வெறுக்கமுடிய வில்லை.எல்லாருக்கும் அவர்களின் அம்மாவை பிடிக்கும். அதற்காக மற்றவர்களின் அம்மாவை வெறுக்கவா செய்வர். அதே நேரத்தில், தமிழ் மொழியை மட்டுமே பிடிக்கும் என்று சொல்வோர் அரசியல் நடிகர்கள். பிற மொழியை பழித்துப் பேசுவோர், மொழியை வைத்து அரசியல் செய்வர்.
பார்லிமென்டில் நம் நாட்டு மொழியான ஹிந்தியில் பேசுவதை அசிங்கமாக நினைக்கும் திராவிட செம்மல்கள், நம்மை நாயை விட கேவலமாக நடத்திய, கொடுமைப்படுத்திய ஆங்கிலேயரின் மொழியை பேசுவதற்கு வெட்கப்படுவதில்லை.
நாட்டின், ௭௫வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நம் நாட்டு மொழியான ஹிந்தியை கொண்டாடுவோம். மூன்றாவது மொழியாக ஹிந்தியை, தமிழர்கள் அனைவரும் கற்க முன்வர வேண்டும்; நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியாளர்களே... தமிழக மக்கள் இனியும் முட்டாள்களாக இருப்பர் என்று எண்ண வேண்டாம். உங்களின் பிழைப்பு நடக்க, இனி வேறு நாடகம் போட கற்றுக் கொள்ளுங்கள்.


விரைவில் சிறைக்கம்பிகளை எண்ணுவீர்கள்!க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வை சட்டசபை எதிர்க்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்திருந்தாலும், ஆவின் பாலில் கொள்ளை உள்ளிட்ட, ஆளுங்கட்சியின் தவறான செயல்பாடுகளை, ஊழல்களை துகிலுரித்து காட்ட, அந்தக் கட்சிக்கு துணிவில்லை. அந்த வேலையை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார். தி.மு.க., அமைச்சர்கள் தினமும் அடிக்கும் லுாட்டிகளையும், அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களையும் புட்டு புட்டு வைக்கிறார். தி.மு.க.,வினருக்கு அவர் சிம்ம சொப்பனமாகவும் திகழ்கிறார்.
இந்நிலையில், 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், 'ஆவினில் மக்கள் கொடுக்கும் பணத்திற்கு குறைவாக பால் வழங்க காரணமான அனைவர் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் தினமும் புதுப்புது ஊழல்கள் முளைத்தபடி இருக்கின்றன. மக்கள் பணம், புதுப் புது பரிமாணங்களில் கொள்ளை அடிக்கப்படுகிறது' என அறிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் பணி நியமனங்களில் நடந்த ஊழல் தொடர்பாக, அம்மாநில தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்; அவரின், 'அன்புக்குரிய' நடிகையிடம் இருந்தும் பல கோடி ரூபாய் பறிமுதலாகி உள்ளது. அதேபோல,
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி., சஞ்சய் ராவத், பண மோசடி வழக்கில் சிக்கி உள்ளார். இவை எல்லாம், தி.மு.க., அமைச்சர்களுக்கும், அந்தக் கட்சி நிர்வாகிகளுக்கும் அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. மத்திய அரசின் உளவு அமைப்புகள், தமிழக ஆட்சியாளர்களை கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகின்றன என்பது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து பழகிப் போன தி.மு.க.,வினர், புதுவிதமான வழிகளில் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கத் துவங்கியிருப்பது, ஆவின் பால் மோசடி வழியாக
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெல்லம் இருக்கும் பானைக்குள் கைவிட்டவன், புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான் என்ற ரீதியில், ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், மேற்கு வங்க அமைச்சரை போல, தி.மு.க., அமைச்சர்களும், சிறைக் கம்பிகளை எண்ணும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.


சீழ் பிடித்த சிந்தனைகளை அகற்றுங்க!கு.நாகராஜ், சக்கம்பட்டி, தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே... 'சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் சிறப்பாக செய்துள்ளோம்' என்று கூறி, தி.மு.க., அரசு பெருமைப்படுகிறது; மிக்க மகிழ்ச்சி.
அதே நேரத்தில், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழரின் விருந்தோம்பலை சிறப்பித்து கூறும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதோடு, செஸ் விளையாட்டிற்கும், தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உலகறியவும் செய்துள்ளார்.
இனி, தன் வெளிநாட்டு பயணங்களின் போதும், அவர் இது பற்றி பேசினால் ஆச்சரியமில்லை. திருவாரூர் மாவட்டம், திருப்பூவனுார் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் வீற்றிருக்கும் ஈசனே, முதல் செஸ் பிளேயர் என்பதையும் பதிவு செய்திருக்கிறார். இதன் வாயிலாக, இன்று இணையத்தில் அதிகம் தேடப்படும் விஷயமாகி இருக்கிறது அந்த கோவில்.
தமிழும், ஆன்மிகமும் வேறு வேறல்ல. ஆன்மிகத்தை ஒதுக்கி விட்டு, தமிழுக்கு எந்தச் சிறப்பும் செய்து விட முடியாது உங்களால். நம் மாநிலத்தின் பண்பாடு, கலாசாரம் எல்லாம் கோவில்களோடு இரண்டறக் கலந்தது. இதை எல்லாம், பிரதமர் மோடி முன் நீங்கள் குறிப்பிட்டு, இத்தகைய சிறப்பு வாய்ந்தது எங்கள் தமிழகம் என்று சொல்லிஇருக்க வேண்டும்; பேசியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறி விட்டீர்கள். ஒவ்வொரு முறையும், உள்ளூர் அரங்கு என்றாலும், உலக அரங்கு என்றாலும், அங்கே திருக்குறளையும், பாரதியின் பாடல்களையும் மேற்கோள் காட்டி வருகிறார், பிரதமர் மோடி. இதை எல்லாம் சொல்லி பெருமைப்பட, உங்களின் பகுத்தறிவு கொள்கை இடம் கொடுக்காது. காரணம், பாரதி ஒரு பிராமணர்; உங்களை பொறுத்தமட்டில் கோவில்கள் மூடத்தனம்,
கேலிக்கு உதவும் பொருள் அப்படித்தானே.துருப்பிடித்த, 'ஈரோட்டு' சிந்தனைகளை துாக்கி எறிந்து விட்டு, தமிழின் மற்றும் தமிழகத்தின் மேன்மைக்கு உண்மையாகப் பாடுபடுங்கள். ஈ.வெ.ரா., விதைத்த விஷத்தை இந்த நவீன காலத்திலும் சுமந்து திரிந்தால், உங்கள் சிந்தனை சீழ் பிடித்திருக்கிறது என்றே அர்த்தம்; புரிந்து கொள்ளுங்கள்.


கலைஞர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டு!அ. அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையொட்டி நடைபெற்ற பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளில், தமிழர் கலாசாரம், தொன்மை, பெருமை, வீரம், விவேகம், வாணிபம் போன்றவற்றை விவரித்து காட்டப்பட்ட, முப்பரிமாண நிகழ்ச்சி மக்களை பெரிதும் கவர்ந்தது. நடிகர் கமல்ஹாசனின் குரலில், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வரலாறு, தோற்றம், சோழ, சேர, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களின் வீர வரலாற்றை விளக்கிய விதம், ஒன்றாம் நுாற்றாண்டில், சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையின் சிறப்பு மற்றும் நீர் மேலாண்மை...
ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வாணிபம், 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட திருக்குறள், தொல்காப்பியம், ஐந்திணை நுால்கள், சிலப்பதிகார காட்சிகள், மன்னனின் தவறான தீர்ப்புக்காக, மதுரை மாநகரம் தீக்கிரையாகி எரிந்த நீதி, முண்டாசு கவி பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் விடுதலை தாக்கம்...
சுனாமி, புயல், வெள்ளம் போன்றவற்றிலிருந்து தமிழர்கள் விரைந்து மீண்டது முதல், இன்றைய இணையதள விஞ்ஞான வளர்ச்சி வரை அத்தனையும், ஒரே நேரத்தில் பார்வையாளர்கள் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணம், தெளிவாக விளக்கிய தொகுப்பு மிக அருமை, அற்புதம்!
தமிழர்களாகிய நாம் அனைவரும், மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய இந்தக் காட்சிகள், நம் ஆக்கப்பூர்வமான பரம்பரை பரிணாமத்தின் சாட்சிகளாக உள்ளன. இந்தக் காட்சிகளானது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கிராமங்களுக்கும் சென்று சேரும் வகையில், மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
இதை உருவாக்கிய அத்தனை கலைஞர்கள், வல்லுனர்கள் மற்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கும் நெஞ்சார்ந்த
பாராட்டுகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-ஆக-202207:01:11 IST Report Abuse
D.Ambujavalli காங்கிரஸ் கூட்டணியால் லாபமில்லை, மற்றும் பா ஜ அரசு ஊழல்களைத் தோண்ட ஆரம்பித்ததும், அப்படியே அந்தப்பக்கம் சாய ஆரம்பித்துள்ள திமுகவிடம் கொள்கை அது இது என்று எதையும் எதிர்பார்க்க முடியாது கொள்ளையடிக்க பாதுகாப்புக்காக யார் இருந்தாலும் அங்கு ஒட்டிக்கொள்வதுதான் கொள்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X