அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: நமக்கு தெய்வ பக்தி அதிகம். கடவுள் மறுப்பை தவிர்த்து, ஈ.வெ.ரா.,வின் மற்ற கொள்கைகளை ஏற்கிறோம். என்னை பொறுத்தவரை, ஸ்ரீரங்கம் கோவில் முன், ஈ.வெ.ரா., தன் மனதுக்குள் பெருமாளை வழிபடுவதாக நினைக்கிறேன். ஈ.வெ.ரா., கடவுளுக்கு எதிரி அல்ல... கடவுள் பெயரை பயன்படுத்தியவர்களுக்கு எதிரியாக இருந்ததாக, நான் நம்புகிறேன். சமீபத்துல கமல்ஹாசனை பார்த்துட்டு வந்தீங்களா...? அவரை மாதிரியே புரியாம பேசுறீங்களே!
அ.தி.மு.க.,வின் தேசிய செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி பேட்டி: உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றம் வரை கொண்டு சென்ற பன்னீர்செல்வம், தலைமை பண்புக்கு அருகதையற்றவராகி விட்டார். அம்மாவின் உண்மையான விசுவாசியாக இருந்தால், கட்சிக்கு இதுபோன்று அவப்பெயர் கொண்டு வரக்கூடாது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவை ஏற்று, பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்.நீங்க சொல்ற பொதுக்குழுவுல தானே, பன்னீரை கட்சியை விட்டே துாக்குனாங்க... கட்சியிலயே இல்லாதவர், எந்தப் பதவியில இருந்து விலகுவார்?
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில், இதுவரை, 28 இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியான கொடுமைகள் அரங்கேறிய பின்னும், அரசு தொடர்ந்து அமைதி காப்பது ஏன்? மக்களின் நலத்தில் சிறிதேனும் அக்கறை இருக்குமாயின் இளைஞர்களை உயிர்பலி எடுக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முற்றாக தடை செய்ய உடனே வலுவான சட்டம் இயற்ற வேண்டும். முடியவே முடியாத, 'நீட்'டுக்கு விலக்கு கோரி சட்டம் இயற்றிய அரசு, இந்த விவகாரத்தில் ஏன் மந்தமா இருக்குது என்பது மில்லியன் டாலர் கேள்வி!
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை, நாட்டின், 75வது சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்ய வேண்டும்.பஞ்சமா பாதகங்கள் செஞ்சிருந்தாலும், பத்தே வருஷத்துல விடுதலை பண்ணிடணும் என்பது தான் உங்க கொள்கையா?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை பேட்டி: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில், அரசாணை, 354 கொண்டு வரப்பட்டது. இந்த அரசாணைப்படி டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட அரசாணை, தி.மு.க., ஆட்சியிலும் தொடர்கிறது.ஒருவேளை, 'இளைய கருணாநிதி' உதயநிதி பதவிக்குவந்தால் தான், உங்க கோரிக்கை நிறைவேறுமோ என்னவோ?
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி:இந்திய கம்யூ., கட்சியின், 25வது மாநில மாநாடு 9ம் தேதி வரை, திருப்பூரில் மூன்று நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. இந்த மாநாட்டின் வாயிலாக மேலும் வலுப்பெறும். அது சரி... எப்ப பார்த்தாலும், மூணு நாள், நாலு நாள்னு மாநாடு நடத்தி பேசிட்டே இருக்கீங்களே... இதன் வாயிலாக எதையாவது சாதிச்சிருக்கீங்களா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கோவிலுக்கு சென்று வழிபடுவது, இறைவன் அருள் வேண்டி யாகம் செய்வது, ஒருவரின் உரிமை மற்றும் விருப்பம். ஆனால், கடவுள் இல்லை என பேசிய குடும்பத்தில் இருந்து வந்த முதல்வரின் மருமகன், இறைவனை வேண்டி தஞ்சம் புகுந்துள்ளார். இது, நாத்திகம் தோற்கடிக்கப்பட்டு, தர்மம் வெற்றி பெறுகிறது என்பதையே உணர்த்துகிறது. சொந்த குடும்பத்திலேயே, தங்கள் கொள்கையை உறுதி செய்ய முடியாதவர்கள், இனி, அந்த கொள்கை குறித்து பேச வெட்கப்பட வேண்டும்.சரியான நெத்தியடி... ஆனா, 'ஊருக்கு தான் உபதேசம்; எங்களுக்கல்ல' என்பவர்கள் வெட்கப்படுவாங்களா என்பது சந்தேகம் தான்!
காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் அறிக்கை: பாரதியார், காசியில் வாழ்ந்த போது மீசை வைத்துக் கொண்டார். அந்த மீசை முகத்தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. அன்று காசியில், பாரதி வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக்க முடிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்க காங்கிரஸ் எப்பவோ செஞ்சிருக்க வேண்டியதை, இன்று முதல்வர் செய்கிறார்!
சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு: இப்போதெல்லாம் பெரிய நடிகர்கள், அவர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்துகின்றனர். இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர். ரஜினியிடமே இதை மாற்ற வேண்டுகோள் வைத்தேன்; எதுவும் நடக்கவில்லை. இங்க ஆயிரத்தெட்டு அனுமதிகள்; அதிகாரிகளுக்கு பார்மாலிட்டீஸ் செஞ்சு ஓய்ஞ்சு போய் தான், பலரும் வேற மாநிலங்களை தேடி போறாங்க!
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி பேச்சு: அமலாக்கத் துறையையும், சி.பி.ஐ.,யையும் மத்திய அரசு தவறாக பயன்படுத்தி, பழிவாங்கும் போக்கை கடைப்பிடித்தால், இலங்கை நிலைமை தான் ஏற்படும். அரசியல் சுயலாபத்திற்கு எதையும் பயன்படுத்தக் கூடாது.தங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறையை, அ.தி.மு.க.,வினரை பழிவாங்க நீங்க பயன்படுத்தவில்லையா?