கவர்னரின் ரகசிய அறிக்கை; திணறும் உளவுத்துறை!
''அதிகாலை துாறலில் நனைந்தபடியே வந்த நண்பர்கள், நாயர் தந்த இஞ்சி டீயை பருகியபடியே பெஞ்சில் அமர்ந்தனர். டீயை ருசித்தபடியே, ''அனுமதி இல்லாம சாம்பலை வினியோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுத்திருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''அனல்மின் நிலைய விவகாரமாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஆமா... திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டுல மின் வாரியத்துக்கு சொந்தமா, 'வட சென்னை' என்ற பெயர்ல அனல் மின் நிலையம் இருக்குது... இங்க பயன்படுத்துற நிலக்கரியில இருந்து, டன் கணக்குல உலர் சாம்பல் வெளியாகும்பா...
''இந்த உலர் சாம்பலை செங்கல் தயாரிப்பு, சாலைகள் போடுறதுக்குன்னு பல பணிகளுக்கு பயன்படுத்துறாங்க... முறையா டெண்டர் விட்டு தான், ஒப்பந்த நிறுவனங்களுக்கு சாம்பல் விற்பனை செய்யணும் பா...
''இந்த நிலையில, நெடுஞ்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு, எந்த முறையான அனுமதியும் இல்லாம, சாம்பல் வினியோகம் செஞ்சிருக்காங்க... இது சம்பந்தமா விசாரணை நடத்திய உயரதிகாரிகள், தலைமை அலுவலகத்துல கட்டுமான பிரிவு மேற்பார்வை பொறியாளர் ஒருவரை, காத்திருப்பு பட்டியலுக்கு மாத்திட்டாங்க... இன்னும் தீவிரமா விசாரிச்சா, நிறைய பேர் சிக்குவாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''மாற்றம் ஒன்றே மாறாதது ஓய்...'' என்ற முன்னுரையுடன், அடுத்த தகவலை சொல்ல ஆரம்பித்தார், குப்பண்ணா...
''தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், தலைமை செயலகத்தின் இரண்டாவது தளத்துல, அமைச்சர்கள் அறை அமைந்துள்ள பகுதியில தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில இருந்தார்... இப்ப, அதே தளத்துல வருவாய் துறை செயலர் அறை பக்கத்துல இருக்கற அறைக்கு மாறிட்டார் ஓய்...
''நிதி அமைச்சர் இருந்த அறைக்கு, தரை தளத்துல இருந்த, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மாறி வந்துட்டார்... காந்தியின் அறை இப்ப காலியாக இருக்கு ஓய்... அதுல சில மாற்றங்கள் செஞ்சுண்டு இருக்கா... 'அந்த அறை யாருக்கு'ன்னு, தலைமைச் செயலகத்துல பரபரப்பான விவாதம் நடந்துண்டு இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நம்ம கவர்னர் ரவி, யாரையும் நம்புறது இல்லை தெரியுமா வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''விபரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தமிழக அரசுக்கு சிம்ம சொப்பனமா இருக்கிற கவர்னர் ரவி, ஆளுங்கட்சியின் கொள்கைகளுக்கு நேர் எதிரா இருக்காருல்லா... இதனால, தி.மு.க., அரசுக்கும், அவருக்கும் இடையில அடிக்கடி மோதல் நடக்கு வே...
''இதுக்கு முன்னாடி, கவர்னரா இருந்த எல்லாரும், மத்திய அரசுக்கு ஏதேனும் அறிக்கை, கடிதம் அனுப்புறதா இருந்தா, தங்கள் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் தயார் செய்வாவ... ஆனா, கவர்னர் ரவி, யார் உதவியும் இல்லாம, தன் லேப்டாப்லயே அறிக்கையை டைப் பண்ணிடுதாரு வே...
''இதனால, அவர் அனுப்புற அறிக்கை, கடிதத்துல என்ன இருக்குன்னு கவர்னர் மாளிகையில இருக்கிற யாராலயும் தெரிஞ்சுக்க முடியலை... அவரது நடவடிக்கைகளை தெரிஞ்சுக்க முடியாம, தி.மு.க., அரசின் உளவுத்துறையும் தவிக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.
**************
'பைபாஸ் ரூட்'டில் பதவி உயர்வுக்கு பேரம்!
''கவர்னரை சந்திக்க, அ.தி.மு.க.,வினருக்கு அனுமதி கிடைக்கலைங்க...'' என்றபடியே வந்தார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு மாவட்டம், ஓடாநிலை மற்றும் ஜெயராமபுரத்துல சமீபத்துல நடந்த தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில, கவர்னர் ரவி கலந்துக்கிட்டாரே...இந்த நிகழ்ச்சிக்கு வந்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் ஈரோடு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், கவர்னரை சந்திச்சு பேசினாங்க...
''இதே நிகழ்ச்சிக்கு வந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், கரூர் விஜயபாஸ்கர் எல்லாம், கவர்னரை
சந்திக்காம போயிட்டாங்க... இது, பழனிசாமிக்கு தெரியவர, 'கவர்னரை மரியாதை நிமித்தமா போய் பாருங்க'ன்னு ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு
போட்டாருங்க...
''உடனே, ஈரோடு மாநகர அ.தி.மு.க., செயலர் தென்னரசு உள்ளிட்ட நிர்வாகிகள், கவர்னரை சந்திக்க ஜெயராமபுரம் போனாங்க... கவர்னர் உதவியாளரோ, 'அப்பாயின்ட்மென்ட் இல்லாம கவர்னரை பார்க்க முடியாது'ன்னு திருப்பி அனுப்பிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரி கண்ணுல இருந்து தப்பவே முடியாதுன்னு புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என்றார், அன்வர்பாய்.
''சென்னை, ஆவடி கோட்ட மின் வாரிய அதிகாரி, அமைச்சரின் ஆவடி தொகுதியில மட்டும் மின் தடை வராம பார்த்துக்கறார்... செங்குன்றம் பகுதியில பூமிக்கு அடியில மின் வடம் பதிக்கும் பணியை, ஆவடிக்கு தள்ளிண்டு போயிட்டார் ஓய்...
''நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமிச்சு கட்டடங்கள் கட்டறவாளுக்கு உடனுக்குடனே மின் இணைப்பு கிடைச்சுடறது... இதுல, கீழ்மட்ட அதிகாரிகள் வசூலிக்கற கட்டிங்கை கணக்கு பார்த்து, தனக்குரிய பங்கை அதிகாரி கறாரா வாங்கிக்கறார் ஓய்...
''அது மட்டும் இல்லாம, பிரிவு அலுவலகங்கள்ல, தனக்கு நம்பிக்கையான ஊழியர்கள் மூலம், அங்க எவ்வளவு வசூல் ஆகுதுங்கற தகவல்களை துல்லியமா சேகரிச்சு, தனக்கு வரவேண்டியதை கச்சிதமா வசூல் பண்ணிடறார்...
''இதனால கீழ் மட்ட அதிகாரிகள், 'கண்காணிப்பு கேமராவுக்கு தெரியாம கூட கட்டிங் வாங்கிடலாம்... நம்ம அதிகாரிக்கு தெரியாம
1 பைசா கூட வாங்க முடியாதுப்பா'ன்னு சலிச்சுக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அருணாசலம் தம்பி வர்றாரு... ஒரு டீ...'' என, ஆர்டர் தந்த அண்ணாச்சியே, ''பைபாஸ் ரூட்டுல பதவி உயர்வுக்கு பேரம் நடக்குல்லா...'' என்றார்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''அரசு போக்குவரத்து கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில சிக்கி தவிக்குல்லா... ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, 80 மாசமா பஞ்சப்படி தரலை... பலருக்கு இன்னும் ஓய்வூதியம் தர முடியாம போக்குவரத்து கழகங்கள் தவிக்கு வே...
''இப்படி பல பிரச்னைகள் இருந்தாலும், துறையின் 14 துணை மேலாளர்களுக்கு, பொது மேலாளர் பதவி உயர்வு வழங்குறதுக்கான பணிகளை, 'பைபாஸ் ரூட்'ல சத்தமில்லாம துவங்கிட்டாவ... இதுக்கு சில அதிகாரிகளையே ஏஜன்ட்களா போட்டு, வசூல் வேட்டையும் நடக்கு வே...
''இது, போக்குவரத்து அமைச்சருக்கு தெரிஞ்சு நடக்கான்னு, துறையிலயே பலர் குழப்பத்துல இருக்காவ... 'இந்த மாதிரி முறைகேடுகளை அனுமதிக்கவே கூடாது'ன்னு, முதல்வர், தலைமை செயலருக்கு சிலர் புகார்களை அனுப்பியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.