தயாரிப்பாளர்கள் வீடுகளில் கண்டெடுத்தது...ரூ.200 கோடி!| Dinamalar

தயாரிப்பாளர்கள் வீடுகளில் கண்டெடுத்தது...ரூ.200 கோடி!

Added : ஆக 06, 2022 | |
சென்னை:தமிழகத்தில் சினிமா தயாரிப்பாளர்களை குறிவைத்து, அவர்கள் வீடுகளில் நடத்தப்பட்டஅதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத 200 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், 26கோடி ரூபாய் ரொக்க பணம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள்,வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் சில மாதங்களாக, வரி

சென்னை:தமிழகத்தில் சினிமா தயாரிப்பாளர்களை குறிவைத்து, அவர்கள் வீடுகளில் நடத்தப்பட்டஅதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத 200 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும், 26கோடி ரூபாய் ரொக்க பணம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் கணக்கில் வராத சொத்து ஆவணங்கள்,வருமான வரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் சில மாதங்களாக, வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் அன்புச்செழியன்; இவர், 'கோபுரம் பிலிம்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் வரி ஏய்ப்பு செய்வதாக, வருமான வரித் துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, சென்னை தி.நகர், ராகவய்யா தெருவில் உள்ள கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவில் உள்ள அன்புச்செழியன் வீடு ஆகியவற்றில், வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.


40 இடங்களில் சோதனை

இதேபோல, மதுரை, காமராஜர் சாலையில் தெப்பக்குளம் அருகே இரண்டு வீடுகள்; கீழஆவணி மூலவீதியில் சினிமா வினியோக அலுவலகம் என, அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 'வி கிரியேஷன்' மற்றும் 'கலைப்புலி' தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வரும் கலைப்புலி தாணுவின், சென்னை தி.நகர், பிரகாசம் சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீடுகளில், ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடரி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ்' தியாகராஜனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், சினிமா தயாரிப்பாளர்களான ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு ஆகியோரின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
சினிமா தயாரிப்பாளர்களை குறிவைத்து, மூன்று நாட்களில், 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்; அதன் வாயிலாக, பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். கணக்கில் காட்டப் படாத 200 கோடி ரூபாயை கண்டு பிடித்துஉள்ளனர்.


வரி ஏய்ப்பு

இது குறித்து, வருமான வரித் துறை ஆணையர் சுரபி அலுவாலியாவெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தில் 2ம் தேதி, வருமான வரித் துறை சார்பில், திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப் பட்டது. சென்னை, மதுரை, கோவை, வேலுாரில், 40 இடங்களில் நடந்த சோதனையில், வரி ஏய்ப்புக்கான பல்வேறு ஆவணங்கள் மற்றும் 'டிஜிட்டல்' ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
அதுபோல், கணக்கில் காட்டப்படாத நிதி பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றை ரகசியமாக பராமரித்து வந்த ஆவணங்கள், ஆதாரங்களைக் கைப்பற்றினர்.மேலும், போலி பண பரிவர்த்தனை ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 கோடி தங்க நகைகள்இந்தச் சோதனையில், கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம் மட்டும் 26 கோடி ரூபாய் சிக்கியது. 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து, பல கோடி ரூபாய் வருமானத்தை மறைப்பதற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், கடன் உறுதி பத்திரங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள், மறைக்கப்பட்ட சொத்து விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மோசடி நிதி நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கின


வேலுாரில் இயங்கிய ஐ.எப்.எஸ்., என்ற, 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' நிதி நிறுவனத்தில் நடந்த சோதனையில்முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:வேலுாரை தலைமையிடமாக வைத்து இயங்கி வரும் ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனம், '1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 8,000 ரூபாய் வட்டி வழங்கப்படும்' என விளம்பரம் செய்தது. இதை நம்பி, பொது மக்கள் பலர் முதலீடு செய்த நிலையில், கோடிக்கணக்கில் மோசடியில் செய்யப்பட்டதாக புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம், இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், முகவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை ஆகிய 21 நகரங்களில் சோதனை நடத்தப்பட்டது.சோதனையில், 220 முக்கிய ஆவணங்கள், 13 கணினிகள், 5 மடிக்கணினிகள், 14 மொபைல் போன்கள், 40 சவரன் தங்கம், ஒரு கார், 1.05 கோடி ரூபாய் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
மோசடியால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், விசாரணை அதிகாரியின், eowlnsifscase@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு புகார் அளிக்கலாம். பொது மக்கள் தங்களுடைய சேமிப்பு பணத்தை, ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள நிதி நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X