ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வல்லந்தை ஊராட்சியில், 350 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யும் பஞ்சாபை சேர்ந்த மன்மோகன் சிங்: விவசாயம், கல்வி, மருத்துவம் போன்றவற்றின் மேம்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும், 'அகல்' அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் இது.
தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும், வறட்சியான பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். இந்த விவசாய வருமானத்தில், 75 சதவீதத்தை அறக்கட்டளை நிர்வாகத்துக்கு அனுப்பி விடுவோம். மீதமுள்ள, 25 சதவீதத்தில், தோட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.கடந்த, 2007ல், இங்கு 350 ஏக்கர் நிலம் வாங்கினோம். நிலத்தை வாங்கும் போது, 350 ஏக்கரிலும் சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடந்தன. முதற்கட்டமாக, 50 ஏக்கரில் இருந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினோம். அப்போது, இந்த நிலம் கரடுமுரடாக இறுகிய கட்டாந்தரை போல இருந்ததால், மண்ணை பொலபொலப்பாக மாற்றுவதற்காக, பல முறை நிலத்தை உழுது, அதன் பின் பசுந்தாள் உரத்துக்காக நவதானியங்கள் தெளித்தோம். அவை நன்கு வளர்ந்த பின் மடக்கி உழவு செய்தோம். மேலும், மண்ணை வளப்படுத்த அடியுரமாக மாட்டு எரு, இலை தழைகளை போட்டு உழுதோம். விவசாயத்துக்கு ஏற்ற வகையில் மண்ணைச் சீர்படுத்தி மாற்றவே, எங்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. அதன்பிறகே, மா, பலா, கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீத்தா, மாதுளை, எலுமிச்சை கன்றுகளை நடவு செய்தோம். அதைத் தொடர்ந்து, படிப்படியாக விரிவாக்கம் செய்தபடி இருந்தோம். 2013ல் இருந்து, ஓரளவுக்கு பலன் கிடைக்க துவங்கியது. அதிக நிழல் விழாத பகுதிகளில், தர்பூசணி, வெள்ளரி என பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறோம்.எந்த வகையான நிலமாக இருந்தாலும், அதில் வறட்சி என்பது நிரந்தரம் கிடையாது. காலச் சூழலுக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். நம்மாலும் மாற்ற முடியும்; அதைத்தான் செய்து காட்டியிருக்கிறோம். எங்களை பார்த்து உள்ளூர் மக்களும் உளுந்து, மிளகாய், கடலை ஆகியவற்றை நம்பிக்கையோடு விவசாயம் செய்கின்றனர்.
********************
பயமுறுத்தியே பணத்தை கறந்து விடுவர்!
மருத்துவ துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பி.சி.ராய் விருதும், நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான, பத்ம விபூஷண் விருதும் பெற்ற டாக்டர் பி.எம். ஹெக்டே: நலக்குறைவு ஏற்படும் போது, பெரும்பாலும் நம் உடலுக்குள் உள்ள மருத்துவரே, அதை சரி செய்து விடுகிறார். நோய் எதிர்ப்பு சக்தி என்ற அந்த மருத்துவர் தோற்கும் போது தான், வெளியில் உள்ள மருத்துவரின் உதவியை தேடிச் செல்ல வேண்டும்.
அப்போது, கருணையுடன் உள்ள மருத்துவர்கள், நம்பிக்கை அளித்து மருத்துவம் பார்க்க வேண்டும். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும், இது சாத்தியமில்லை.நல்ல மனைவி, கணவன் அமைவது மட்டுமல்ல, நல்ல மருத்துவர் உங்களுக்கு கிடைப்பதும் இயற்கை கொடுத்த வரம் என்று தான் சொல்வேன்.எனவே, நலமுடன் நல்வாழ்வு வாழ விரும்பும் மனிதர்கள், மறந்தும் மனிதத்தன்மை இல்லாத மருத்துவமனைகள் பக்கம் சென்று விடாதீர்கள்.
குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து, ஆசை காட்டி அழைப்பது போல, இலவச பரிசோதனை முகாம்களை கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஊர்தோறும் நடத்தி வருகின்றன.
இது, ஒரு வியாபார யுக்தி; ஆள் பிடிக்கும் வேலை. புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நலமாக உள்ளவர்களுக்கு இது அவசியமில்லை.இந்த மருத்துவ மந்திரவாதிகளின் கருவிகளில் ஒன்று, நன்றாக வாழும் மனிதரிடம் கூட ஏதாவது ஒரு குறையை படம் பிடித்துக் காட்டும் வல்லமை உடையது.உண்மையில், அந்த குறைபாட்டை அப்படியே விட்டு விட்டால், நம் உடலுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி என்ற மருத்துவரே அதைச் சரி செய்து விடுவார்.
அப்புறம், எப்படி இந்த வெள்ளைக் கோட்டு மந்திரவாதிகளுக்கு வருமானம் வரும்?இலவச பரிசோதனை பொறியில் சிக்கியவர்களை, புரியாத பெயர்களை சொல்லி, நோயாளி என்ற முத்திரை குத்தி, படுக்கையில் கிடத்தும் வரை ஓயமாட்டார்கள்.'உங்களுக்கு அந்த நோய் வரும்; இந்த நோய் வரும் ஆரம்ப நிலை உள்ளது. இப்போதே, சிகிச்சையை துவக்கினால் தான் உயிர் பிழைக்க முடியும்...' என்றெல்லாம் பயமுறுத்தி, பணத்தை கறக்க துவங்கி விடுவர்.ஆங்கில மருத்துவ உலகம் அறிவித்துள்ள, ஒரு மருத்துவ உண்மையை உரக்க சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்...நீரிழிவு, ரத்த அழுத்தம் என்ற இரண்டு நோய்களை மட்டுமே, ஆரம்ப நிலையில் பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும்.
பிற நோய்கள் எதுவாக இருந்தாலும், அதன் தாக்குதல் நம் உடலுக்குள் ஊடுருவி பாதிப்பு ஏற்படுத்திய பிறகே, அறிந்து கொள்ள முடியும். உண்மை இப்படி இருக்க பரிசோதனைகள் என்ற பெயரில், அறியாத மக்களிடம் மட்டுமல்ல, படித்த மக்களையும் ஏமாற்றுகின்றனர்.