மைசூரு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அரண்மனைதான். இதையடுத்து, நினைவுக்கு வருவது 'மைசூர்பாகு' எனப்படும் இனிப்பு. இதற்கென தனித்துவம், சுவை உள்ளது. இந்த இனிப்பு, முதலில் அரண்மனையில் தான் தயாரானது.
இதன் கதையே ஒரு சுவையானதுதான்.மைசூரு மன்னர்கள் பலரும், உணவு பிரியர்களாக இருந்தார்கள். குறிப்பாக, மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் உணவை விரும்பியது மட்டுமின்றி, அதை தயார் செய்பவர்களை பாராட்டவும் செய்வார். அப்படித்தான் அரண்மனை தலைமை சமையல்காரரான காகசுரா மாதப்பா மேல் அதிக அன்பு காட்டினார்.மைசூரு அரண்மனையில் மாதப்பாவின் உணவைச் சாப்பிடாதவர்கள் யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை. நால்வடி கிருஷ்ணராஜா உடையார், நல்ல உணவை விரும்பிச் சாப்பிடுவார் என்பதால், மாதப்பா அவருக்குப் பிடித்த மாதிரியான புதுப்புது உணவு வகைகளை சமைத்து அவரது பாராட்டைப் பெறுவார். தினம் தினம் மைசூரு அரண்மனையில் மாதப்பா, தன் கைகளால் பல அற்புதங்களை செய்துள்ளார்.ஒருநாள் மாதப்பாவிற்கு புதிதாக ஒரு இனிப்பு பண்டத்தை செய்து பார்க்கலாம் என தோன்றியிருக்கிறது. ஆனால், உணவு நேரம் நெருங்கிக் கொண்டு இருந்ததால், குறைந்த நேரத்தில் எதையாவது செய்யலாம் என நினைத்தார்.அவர் கண் முன் இருந்தவை கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகிய மூன்று பொருட்கள் மட்டுமே. அவற்றை வைத்து, குறைந்த நேரத்தில் ஒரு இனிப்பை தயார் செய்தார். மன்னர் சாப்பிட வந்தார். அன்றைய நாளின் வழக்கமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.கடைசியாக புதிய இனிப்பை மன்னரின் இலையில் பரிமாறினார் மாதப்பா. மன்னர் என்ன சொல்வாரோ என காத்திருந்தார். நெய் மணம் மூக்கைத் துளைத்தது. இனிப்பு நாவில் கரைந்த வினாடி மன்னரும் கரைந்தார்.
மன்னர் இனிப்பின் பெயரைக் கேட்ட நொடியில், சட்டென, 'மைசூரு பாகா' என்றார் மாதப்பா. கன்னட மொழியில், 'பாகா' என்றால் சர்க்கரைப் பாகு என்று பொருள். அதில் ஊரையும் சேர்த்து, 'மைசூரு பாகா' என்று பெயர் வைத்தார்.அந்த இனிப்பின் செய்முறையை ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார் மன்னர். அதைத் தொடர்ந்து, அரண்மனையில் அடிக்கடி அந்த இனிப்பு செய்யப்பட்டது. அரண்மனைக்கு வரும் விருந்தினர்களுக்கு அது வழங்கப்பட்டது. அதன் புகழ் மெல்ல மெல்ல பரவ துவங்கியது.பலருக்கும் மைசூரு பாகா செய்ய கற்றுக்கொடுத்தார் மாதப்பா.அரண்மனையில் மன்னர்கள் மட்டும் சுவைத்து வந்த அந்த அபூர்வ இனிப்பை, மாதப்பாவின் கை பக்குவத்திலேயே பலரும் சாப்பிட வேண்டும் என்று, நான்காம் கிருஷ்ணராஜாவின் மகனும், அவருக்கு அடுத்த மன்னருமான ஜெய சாமராஜேந்திர உடையார் விரும்பினார்.
மாதப்பாவிடம், அரண்மனை வாசலில் சிறிய கடை போட்டு, மைசூரு பாகாவை விற்பனை செய்யலாம் என ஆலோசனை அளித்தார்.அதைக் கேட்ட மாதப்பா, மகிழ்ச்சியில் திகைத்து போனார். அதன்பின், 1957ல் மைசூரு அரண்மனைக்கு வெளியே சாயாஜி ராவ் சாலையில் நெய்மணம் வீச 'குரு ஸ்வீட்ஸ்' கடை உதயமானது. அந்த கடை மிகவும் பிரபலமடைந்து நான்காவது தலைமுறையை கண்டுள்ளது. அந்த மைசூரு பாகாதான் தற்போது, 'மைசூர்பாகு' என அழைக்கப்படுகிறது.