கோவை:முதியோர் இல்லம் நடத்துவோர், சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கை:சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிபதி அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் ஆகியோர், முதியோர் இல்லங்கள், ஓய்வு கால முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
முதியோர் இல்லங்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.எனவே, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும், ஆதரவற்ற முதியோர் வாழ்ந்து வரும் ஓய்வு கால முதியோர் இல்லங்கள், கட்டணம் பெற்று மற்றும் கட்டணம் இல்லாமல் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்கள், தமிழக அரசின் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நல்வாழ்வுச் சட்டம் 2007ன் அரசாணை 83ன்படி பதிவு செய்யப்பட வேண்டும்.இதுவரை பதிவு செய்யாமல் செயல்படும் முதியோர் இல்லங்கள் அனைத்தும், உரிய சான்று பெற்று மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.