சென்னை:அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி தடத்தில் 25 கிலோ மீட்டர் துாரத்திற்கு 3, 4வது புதிய பாதை அமைக்க இறுதிகட்ட சர்வே பணியை விரைவில் துவங்கப்படுகிறது.சென்னை மற்றும் புறநகரில் இயக்கப்படும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்க, பிரத்யேக ரயில் பாதைகள் உள்ளன. ஆனால், சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி தடத்தில், இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் ஒரம் கட்டி நிறுத்தப் படுகின்றன. தினமும் 45 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே, இந்த தடத்தில் அத்திப்பட்டு வரையில் இருக்கும் நான்கு வழி பாதைகளை, கும்மிடிப்பூண்டிக்கு நீட்டிக்க வேண்டுமென, பயணியர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது, குறித்து நம் நாளிதழில் கடந்த மாதம் 9ம் தேதி விரிவாக செய்தி வெளியானது. இந்நிலையில், அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி தடத்தில், 25 கி.மீ., துாரத்திற்கு 3, 4வது புதிய பாதை அமைக்க, இறுதி கட்ட சர்வே பணியை மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கும்மிடிப்பூண்டி தடத்தில், ரயில்கள் தாமதம் இன்றி இயக்கவும், கூடுதல் ரயில்களின் சேவை அளிக்கவும், கூடுதல் பாதை தேவைப்படுகிறது. எனவே, தற்போது அத்திப்பட்டு வரையில் உள்ள நான்கு வழி பாதைகளை, கும்மிடிப்பூண்டி வரையில் நீட்டிக்க, இறுதி கட்ட சர்வே பணியை விரைவில் துவங்கவுள்ளோம். அதன்பின், இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதல் பெற்று படிப்படியாக பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து ரயில் பயணியர் கூறியதாவது:ரயில் பயணியரின் நீண்ட நாட்கள் கோரிக்கையை தெற்கு ரயில்வே கவனம் செலுத்தி, சர்வே பணிகளை துவங்கவுள்ளது வரவேற்கதக்கது. இதன் வாயிலாக, லட்சகணக்கான பயணியர் பயனடைவர். இந்த திட்டப்பணிகளை தாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.