பெங்களூரு:கர்நாடக சட்டமேலவையில், ஆளுங்கட்சி பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால், மதமாற்றத் தடை மசோதாவை தாக்கல் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. இம்முறை மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில், தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.
கர்நாடக சட்டசபையில், இதற்கு முன் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருக்கவில்லை. சட்டசபையில் அங்கீகாரம் பெறும் மசோதாக்கள், மேலவைக்கு வரும் போது, தோல்வியடைகிறது. அரசுக்கும் தலைவலியாக இருந்தது.
எளிதில் அங்கீகாரம்
பா.ஜ., அரசின் மிக முக்கியமான மசோதாவான, மதமாற்றம் தடை மசோதா, பெலகாவி கூட்டத்தொடரில், 2021 டிசம்பர் 23ல், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், சட்டசபையில் தாக்கல் செய்து எளிதாக அங்கீகாரம் பெற்றது.
ஆனால் மேலவையில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் - ம.ஜ.த., உறுப்பினர்கள் சேர்ந்து, எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவுக்கு அங்கீகாரம் கிடைக்காமல், அரசும் தர்மசங்கடத்துக்கு ஆளானது. முந்தைய சட்டசபையின் போது, இந்த மசோதாவை சட்டமேலவையில் தாக்கல் செய்ய வேண்டுமென, தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் பெரும்பான்மைக்கு ஒரு இடம், குறைவாக இருந்ததால், மசோதாவை தாக்கல் செய்ய அரசு தயங்கியது.
அதே நேரத்தில், மசோதா அமலுக்கு வருவது, தாமதமாகக் கூடாது என்பதால், அவசர சட்டம் வழியாக அமல்படுத்த அரசு விரும்பியது. சில மாதங்களுக்கு முன் நடந்த, ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதி தேர்தலில், நான்கில் இரண்டு இடங்களில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால், மேலவையில் பா.ஜ.,வின் உறுப்பினர் பலம் அதிகரித்தது. இப்போது மேலவையில், பா.ஜ.,வின் பலம், 39 ஆக உள்ளது. மேலவையின் மொத்த உறுப்பினர் பலம், 75. இதில் 40 இடங்கள் வைத்திருந்தால், பெரும்பான்மை கிடைக்கும்.
பா.ஜ., பெரும்பான்மை பெற, ஒரு இடம் மட்டுமே குறைவாக இருந்தது. மழைக்கால கூட்டத்தொடரில், மதமாற்றம் தடை மசோதாவை தாக்கல் செய்ய, அரசு விரும்பியது. சுயேச்சை எம்.எல்.சி., லக்கன் ஜார்கிஹோளியும், பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பதால், மசோதாவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என, அரசு நம்பியது. ஆனால் அதற்கான அவசியம் ஏற்படாது.
விரிவான விவாதம்
இப்ராகிம் ராஜினாமாவால், மேலவையின் ஒரு இடத்துக்கு நடந்த தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் பாபுராவ் சிஞ்சனசூர், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே மேலவையில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. எந்த கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டியதில்லை. எனவே மழைக்கால கூட்டத்தொடரில், மதமாற்றம் தடை சட்டத்தை தாக்கல் செய்து, விரிவாக விவாதித்த பின், அங்கீகாரம் பெற்று கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப, மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
குஷி
இந்த மசோதாவில், பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பணத்தாசை, இலவச கல்வி அளிப்பது, திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து, நல்ல வாழ்க்கையை ஏற்படுத்துவதாக ஆசை காண்பிப்பது, பலவந்தமாக மதமாற்றம் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது ஆகிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. சட்டமேலவையில் பா.ஜ.,வின் பலம் அதிகரித்து, பெரும்பான்மை இருப்பதால், தலைவர்கள், தொண்டர்கள் குஷியடைந்து உள்ளனர். இனி முக்கிய மசோதாக்களுக்கு, அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் இருக்காது.